நாட்டில் சீரற்ற கால நிலையால் பெய்துவரும் அடை மழை காரணமாக, கேகாலை மாவட்டம் ரம்புக்கனை பகுதியிலும், குருணாகல் மாவட்டம் அலவ்வ பொலிஸ் பிரிவிலும் இரு வீடுகள் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரு சிறுமிகள், ஒரு யுவதி உள்ளிட்ட 4 பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கேகாலை – ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புக்கனை – தொம்பேமட வீதியில் வேகட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அவ்வீட்டிலிருந்த நால்வரில், இரு சிறுமிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தாயும், 8 வயது மற்றும் 14 வயதான அவரது இரு மகள்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை குருநாகல் அலவ்வ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரம்மலை – வென்னொருவ பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் 23 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் தாதியாக கடமை புரியும் யுவதியே உயிரிழந்துள்ளதாகவும் அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்த சம்பவம் பதிவாகும் போது வீட்டில் தாய், மகள், மகன் ஆகிய மூவருமே இருந்துள்ளதுடன் தாய்க்கும் மகனுக்கும் இதன்போது எந்த காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, மாத்தளை, பதுளை, யாழ்ப்பாணம், மன்னார், காலி, மாத்தறை, இரத்தினபுரி, குருணாகல், பொலனறுவ, திருகோணமலை, புத்தளம், கிளிநொச்சி, மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 வீடுகள் முழுமையாகவும், 89 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் நொச்சியாகம பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நொச்சியாகம பகுதியில் 300.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் , ரனோராவ பகுதியில், 260 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ரபேவ பகுதியில் 210.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வெவெல்தலாவ பகுதியில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக யாழ். நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது.
வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி விதியானது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியான போலீசாரால் அறிவிக்கப்பட்டு வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் பெரும் மழை பொழிகின்றது. இதனால் நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றன.
இதேநேரம் யாழ் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபுரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி, மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன.
கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார் ,பேசாலை, தாள்வுப்பாடு, மன்னார் சாந்திபுரம்,சௌத்பார், ஜிம்ரோன் நகர் உள்ளிட்ட மன்னார் நகர் பகுதியில் உள்ள பல கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மடுக்கரை உள்ளிட்ட சில கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விடத்தல் தீவு,தேவன் பிட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் விவசாய நிலங்களில் மழை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு உள்ளமையினால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் அமைந்துள்ள மீன் வாடிகள் சேதமாகி உள்ளதோடு, படகுகளும் சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதிகளில் உள்ள இடர்முகாமைத்துவ நிலையங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற காலநிலையினை அடிப்படையாகக் கொண்டே விடுமுறையை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று புலம்கிராமத்தில் தனி தீவாக 90 குடும்பங்கள் சிக்கவுள்ள நிலையில் அவசர நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் குறித்த வீதி ஊடான வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதிலாக அமைக்கப்பட்ட வீதிக்கு மேலாக குளத்து நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் பெருக்கெடுத்த நிலையில், நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அந்தவகையில் விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டு வான்கதவுகளும், கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 752 குடும்பங்களைச் சேர்ந்த 2976 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு ஒரு குடும்பம் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு , அனர்த்த எச்சரிக்கை காரணமாக 88 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
களனி கங்கையின் நீர் மட்டம் 8 மீற்றரை விட அதிகரிக்குமாயின் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படும்.
எனினும் இன்று பிற்பகல் வரை அவ்வாறு வெள்ளம் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்படவில்லை. எவ்வாறிருப்பினும் கடுவலை மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களிலும் , ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலும் சில வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.
தற்போது நிலவுகின்ற கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மக்களை மீட்டல் , பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]