தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. கொட்டும் மழைக்கு மத்தியில் மாணவர்களும் ஊழியர்களும் திரண்டிருக்கின்றனர்.
** சிறைச் சாலைகளில் பல வருடங்களாக எந்த விதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
** உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாய பூர்வமான கோரிக்கைகளை செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும்.
*** சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்கைப் பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்க் கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் நேற்று 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய வரலாற்றில் பல்கலைக் கழக மாணவர்களுக்கெனத் தனியானதொரு வரலாறு உண்டு. எந்த விதமான பின்புலமுமின்றி பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேசம் தமிழர்களைத் திரும்பிப் பார்க்க வைக்குமளவுக்கு வரலாற்றில் பல நிகழ்வுகள் பதிவாகி இருக்கின்றன.
எல்லா வேளைகளையும் போலவே தங்க் வரலாற்றுக் கடமைக்காக இப்பொழுதும் செயலில் இறங்கியிருக்கிறார்கள் மாணவர்கள்.
இந்த வேளையில், அவர்களை ஆதரிக்காவிடினும், அவர்களை மலினப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளிலாவது ஈடுபடாதிருத்தல் வேண்டும்.
இது பல்கலைக்கழக நிர்வாகத்துக்கோ, தனிப்பட்ட முறையில் எவரொருவருக்கேனுமோ எதிராக நடத்தப்படவில்லை.
உயிருக்காக வாடும் உறவுகளை மீட்பதற்காகக் குரல் கொடுக்கும் போராட்டம். இதில் தோள் கொடுத்துத் துணைநிற்க வேண்டியது ஒவ்வொருவருக்கும் முன்னால் உள்ள தார்மீகக் கடமை.
அதைவிட,
தத்தம் அரசியல் நிரல்களுக்காக இந்த நிலைமையை ஏற்படுத்திய அரசியல் வாதிகள் பலர், மாணவர்கள் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாதிருப்பது கண்டனத்துக்குரியது.
ஆரம்பத்தில் இது விடயத்தை எடுத்தாண்டவர்கள் கூட, இது தொடர்பில் குரல் கொடுக்கத்தவறியிருப்பது பெரும் வருத்தத்தையளிப்பதுடன், ஏமாற்றமளிக்கிறது.