இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மோசமானதொரு செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் மாணவர் சார்ந்த பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை ஏன் பின்பற்றப்படுகின்றது என்பதனை பலர் வினாவாக பல ஆண்டுகள் முன்வைத்தும் விடை தெரியாமல் உள்ளனர்.
மனித மனங்களின் தாக்கம், குழந்தைகளில் ஏற்படும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் இவையெல்லாம் கருத்தில் கொள்ளப்படாமல் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுவது விமர்சனத்திற்குரியது மட்டுமன்றி மனித உரிமைகளை மீறும் செயலாகவும் இருக்கின்றது.
எனவே இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடைமுறைகளைக் கைவிட்டு மனித மனங்கள் பாதிக்கப்படாத வகையில், விசேடமாக பாடசாலைப் பிள்ளைகளின் மனங்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இலங்கையில் பொருட்களின் விலைமாற்றம் உட்பட பல வெளியீடுகள் நள்ளிரவிலேயே அறிவிக்கப்படுகின்றன.
இதற்கான காரணத்தை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் உள்ளவர்களும் அங்கீகரிப்பது வேதனையான விடயம் ஆகும்” எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

