‘பரிதாபங்கள் ‘ எனும் இணையதளம் மூலமாக டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் கோபி- சுதாகர். இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ ஓ காட் பியூட்டிஃபுல் ‘ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் விஷ்ணு விஜய் இயக்கத்தில் உருவாகும் ஓ காட் பியூட்டிஃபுல் எனும் திரைப்படத்தில் கோபி – சுதாகர் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விடிவி கணேஷ், வின்சு ராம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா, முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்திவேல் – கே. பி. ஸ்ரீ கார்த்திக் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜே சி ஜோ மற்றும் அருண் கௌதம் ஆகியோர் இணைந்து இசையமைக்கிறார்கள். ஃபேண்டஸி ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சட்டத்தரணிகளை பற்றியும்… நீதிமன்றங்களை பற்றியும்… அவல நகைச்சுவையுடன் சித்தரித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.