Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பராசக்தி – திரைப்பட விமர்சனம்

January 12, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
பராசக்தி – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : டான் பிக்சர்ஸ்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, சேத்தன், காளி வெங்கட், பிருத்வி ராஜன், ராணா டகுபதி – பசில் ஜோசப் – டாலி தனஞ்ஜெயா – மற்றும் பலர்.

இயக்கம் : சுதா கொங்கரா

மதிப்பீடு : 3.5/5

‘பராசக்தி’ – இத்திரைப்படம் வெளியாவதற்கு முன் இந்திய அளவில் கவனம் ஈர்த்த 1960 களில் தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற மொழி போராட்டத்தை பின்னணியாக கொண்ட படைப்பு என முன்னிலைப்படுத்தப்பட்டதால்… தமிழ் உணர்வு மிக்க உலகத்தமிழர்கள் அனைவரிடத்திலும் இப்படத்தை படமாளிகையில் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

1960களில் நடைபெற்ற இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தையும், போராட்டத்தில் பங்கு பற்றியவர்களின் மொழி உணர்வினையும் முழுமையாக படைப்பின் ஊடாக பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

இந்திய அரசு 1960 களில் இந்தி மொழியை அனைவரும் கற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு எதிராக புறநானூறு படை எனும் பெயரில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான இயக்கம் உருவானது. இந்த இயக்கத்திற்கு செழியன் ( சிவகார்த்திகேயன் ) தலைமை தாங்குகிறார்.

இந்த படையின் ஒரு நடவடிக்கையாக பயணிகள் புகையிரதத்தை தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெறுகிறது. இதனை கண்ட இந்திய தேசிய அரசின் உளவுத்துறை அதிகாரியும், தமிழ் மற்றும் தமிழர்கள் மீதான வெறுப்புணர்வு உடையவருமான திரு ( ரவி மோகன்) போராட்டக்காரர்களை கையும் களவுமாக பிடிக்க போராடுகிறார்.

இந்த தருணத்தில் செழியன், திருவின் கைகள் மீது வலிமையாக தாக்கிவிட்டு தப்பிக்கிறான். இதனால் திருவின் வலது கையும், வலது கைவிரல் ஒன்றும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த போராட்டத்தின் காரணமாக தன் படையில் உள்ள கோவிந்த் எனும் நண்பரை இழக்கிறார். இதனால் போராட்டத்தை கைவிட்டு நாளாந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார் செழியன்.

சில ஆண்டுக்குப் பிறகு அவருடைய சகோதரர் சின்னத்துரை ( அதர்வா) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது.. மீண்டும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டம் தன்னெழுச்சியாக எழுகிறது. இதில் சின்னத்துரையும் பங்கு பற்றுகிறார். இதனை அறிந்த செழியன் சின்னத்துரையிடம் போராட்ட வேண்டாம் என்று அறிவுறுத்துவதுடன், அவன் போராட்டத்தில் பங்கு பற்றாத அளவிற்கு தண்டிக்கிறான்.

இந்தத் தருணத்தில் புகையிரத துறையில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் செழியன்… பதவி உயர்வுக்காக இந்தி மொழியை கற்றுக்கொண்டு நேர்காணலுக்கு செல்கிறார். அங்குள்ள உயரதிகாரிகள் உன்னால் சரளமாக இந்தி மொழியை பேச முடியவில்லை என்ற காரணத்தை கூறி, அவரின் பதவி நிரந்தரத்திற்கும்… பதவி உயர்வுக்கும்… வேட்டு வைக்க அதிர்ச்சி அடைகிறான் செழியன்.

அத்துடன் அன்றைய காலகட்டத்தில் அவர் கண் முன்பே மாணவர் ஒருவர் தமிழ் மொழிக்கு ஆதரவாக இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்திக் கொண்டு வீர மரணம் அடைய… அதனால் உத்வேகம் கொள்ளும் செழியன், தன் சகோதரனான சின்னத்துரையுடன் இணைந்து  இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை அற வழியில் தீரமுடன் தொடர்கிறான்.

இந்நிலையில் புகையிரதப் பெட்டி எரிப்பு போராட்டத்தின் போது உளவுத்துறை அதிகாரியான திருவின் செயல்பாடு குறித்து அதிருப்தியை‌ வெளிப்படுத்திய இந்திய அரசிடம்.. நல்ல பெயரை சம்பாதிப்பதற்காகவும்,  புகையிரத பெட்டி எரிப்பு சம்பவத்திற்கு பின்னணியாக இருந்த தலைவர் செழியனை கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்ற தீவிர வெறியுடன் இருக்கும் திரு.. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதாக தமிழக அரசிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு, களத்தில் இறங்குகிறார்.

அதன் பிறகு செழியனின் இந்தி மொழி எதிர்ப்பு உணர்வு வென்றதா? அல்லது திருவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அரசின் அடக்குமுறைக்கு வெற்றி கிடைத்ததா? என்பதை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.

முதல் பாதியில் கதையின் தொடக்கத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தீவிரத்தை உணர வைக்கும் வகையிலான காட்சிகளை வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு.. அதன் பிறகு செழியன் – எதிர் வீட்டு ரத்னமாலா ( ஸ்ரீ லீலா) இடையேயான காதல் கதையாக பயணிக்க தொடங்குகிறது. இந்த நேரத்தில் பார்வையாளர்களின் உற்சாகம் குறையத் தொடங்குகிறது. அதை குறையாமல் காத்திடும் வகையில் இந்தி மொழி திணிப்பு தொடர்பான சில காட்சிகளை தபால் அலுவலகத்தை தொடர்பு படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும்… முதல் ஒரு மணி நேரம் பரபரப்பான எந்த திருப்பமும் இல்லாமல் இயல்பாக வழக்கமாய் செல்கிறது. முதல் பாதியின் நிறைவு பகுதியில் சின்ன எதிர்பார்ப்பை மீண்டும் படக்குழு ஏற்படுத்துகிறது.

இரண்டாம் பாதியில் போராட்டக் குழு-  காவல்துறை-  அரசாங்கம்- என ஒவ்வொரு தரப்பின் நகர்வுகளும்,  எதிர்பாராத திருப்பங்களுடன் நகர… சுவராசியும் கூடுகிறது.  உச்சகட்ட காட்சியிலும் வெற்றி எப்படி கிடைத்தது? என்ற சின்ன எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அதன் வீரியம் குறைவுதான்.

இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை கரூரில் வாழ்ந்த சைவ சமய துறவியான ஈழத்து சிவானந்த அடிகள் முதன்முறையாக முன்னெடுத்தார். இந்த வரலாற்றுப் பதிவு எங்கும் குறியீடாக கூட குறிப்பிடப்படவில்லை. பின்னர் 60களில் மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டமாக மாறியது.

அந்தத் தருணத்தில் சென்னை- மதுரை- திருச்சி- பொள்ளாச்சி- ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தை தழுவி… வரலாற்றில் மறைக்கப்பட்ட சில உண்மைகளை இப்படைப்பு உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறது. அதற்காக இயக்குநர் உள்ளிட்ட படைப்பு குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

சாதனையாளர்கள் -வெற்றியாளர்கள்- புகழ்பெற்றவர்களின் சுயசரிதையை தழுவி படைப்புகளை உருவாக்குவது என்பது வேறு. வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தி படைப்புகளை உருவாக்குவது என்பது வேறு. 1960களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போராட்டமும், தமிழ் மொழி மீதான பற்றும் தமிழர்களிடத்தில் தான் அதிகம் இருந்தது.

அவர்கள்தான் போராட்டத்திற்கு வலிமைமிக்க உளவியல் காரணியாகவும்.. ஆதரவாளர்களாகவும் திகழ்ந்தனர். ஆனால் இப்படத்தில் இயக்குநர் சுதா தெலுங்கினை தாய் மொழியாக கொண்டவர் என்பதாலும்… ஒவ்வொரு படைப்பிற்கும் இயக்குநருக்கு என பிரத்யேக படைப்பு சுதந்திரம் இருக்கிறது என்பதாலும்… இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான உணர்வை மீட்டெடுப்பதாக இருந்தாலும்… இதுவும் ஒரு திரைப்படம் என்பதாலும்.. மொழி உணர்வு + வணிகத்தனம் +மற்ற மொழி அரவணைப்பு + சமகால பான் இந்திய படைப்பு உத்தி+  என கலவையாக இந்த பராசக்தி படைக்கப்பட்டதால்… இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கடந்த கால உணர்வை பறைசாற்றினாலும்… அதில் அடர்த்தியான வெப்பம் இல்லை. வணிகத்தனம் கலந்த பார்வையே மிஞ்சி இருக்கிறது.

செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் புகையிரத துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்- மொழி உணர்வுக்காக போராடும் குழுவின் தலைவர்- எதிர் வீட்டு பெண்ணான ரத்னமாலாவை காதலிக்கும் காதலர்- மொழி உணர்வு மிக்க போராட்டக்காரர்களை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்லும் தலைவர் – என ஒவ்வொரு தோற்றத்திலும் தன்னுடைய பங்களிப்பை முழுமையாகவும், நேர்த்தியாகவும், வழங்கி பராசக்தியின் அடி நாதமாக திகழ்கிறார்.

ரஷ்ய நாட்டிற்கு சென்று உளவு பணியில் ஐந்தாண்டு காலம் சிறப்பாக பணியாற்றி விட்டு தமிழர் மீதான வெறுப்புணர்வுடன் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியான திரு வேடத்தில் ரவி மோகன் நூறு சதவீதம் பொருந்தி, அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.

சின்னத்துரை என்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக நடித்திருக்கும் அதர்வா துரு துரு தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அதர்வாவின் தந்தையான மறைந்த நடிகர் முரளி – 40 வயதிற்கு பின்னரும் கல்லூரி படிக்கும் இளைஞராக திரையில் கச்சிதமாக தோன்றுவார். அப்பாவிற்கு நிகராக மகனும் கல்லூரி மாணவர் தோற்றத்தில் இளமையாகவும் தோன்றி ரசிகர்களை – கல்லூரி மாணவர்களை கவர்கிறார்.

ரத்னமாலா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ லீலா-  நடிப்பதற்காக அவருக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

உச்சகட்ட கட்சியில் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் ராணா ரகுபதி- பசில் ஜோசப்- டாலி தனஞ்ஜெயா- ஆகிய தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் தனி கவனம் ஈர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கலை இயக்கம் – பின்னணி இசை-  இந்த மூன்று விடயங்களும் படைப்பின் தரத்தை உயர்த்துவதுடன்… பார்வையாளர்களை கதை களத்திற்கே அழைத்துச் செல்வதால் பாராட்டப்பட கூடியவர்கள்.

‘தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி மொழி திணிப்புக்கு தான் எதிரானவர்கள்’ என்ற கூர்மையான வசனங்கள் பலம்.

படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் , சௌராஷ்ட்ரா ஆகிய மொழிகளில் உரையாடலை வைத்திருப்பதும் பலம்.

‘ரத்னமாலா..’ எனத் தொடங்கும் பாடல் இதம்.

பேரறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகர் சேத்தனின் தோற்றமும் சிறப்பு.

பராசக்தி – அர்த்த நாரீஸ்வர தமிழ்த்தாய்.

Previous Post

தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் | மோடியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்து!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures