அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் சனிக்கிழமை கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 6 ஓட்டங்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ரியான் பரக் தலைமையிலான ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

வழமைபோல் யஷஸ்வி ஜய்ஸ்வால் (55), வைபவ் சூரியவன்ஷி (31) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜய்ஸ்வால் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
எனினும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய த்ருவ் ஜுரெல் 6ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
த்ருவ் ஜுரெல் 75 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரவிந்த்ர ஜடேஜா 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
211 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்ற தோல்வி அடைந்தது.

சாய் சுதர்சன், குமார் குஷாக்ரா (18) ஆகிய இருவரும் 48 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
மொத்த எண்ணிக்கை 107 ஓட்டங்களாக இருந்தபோது சாய் சுதர்ஷன் 73 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஜொஸ் பட்லர் 26 ஓட்டங்களையும் ராகுல் தேவாட்டியா 12 ஓட்டங்களையும் பின்வரிசையில் அணித் தலைவர் ராஷித் கான் 24 ஓட்டங்களையும் கெகிசோ ரபாடா ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

ராஷித் கானும் கெகிசோ ரபாடாவும் 8ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினர். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் 7 ஓட்டங்களால் வெற்றி இலக்கை கடக்கத் தவறியது.
பந்துவிச்சில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனானார்.

