அரசாங்கம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரச பயங்கரவாத சட்டமூலமாகும். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் தெரிவித்திருக்கின்ற நிலையில், இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது என்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரச பயங்கரவாத சட்டமூலமாகும். இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதேபோன்று இந்த சட்டமூலத்துக்கு சர்வதேச ரீதியிலும் பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன், அரசாங்கத்தின் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு சர்வதேச ரீதியில் மாத்திரமல்லாது, தேசிய மட்டத்திலும் பாரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கம் தற்போது வர்த்தமானியில் வெளியிட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டது அல்ல. சட்டமா அதிபர் திணைக்களம் தயாரித்திருந்தால், முழுமையாக நிராகரிக்கப்படும் சட்டமூலத்தை தயாரிப்பதில்லை.
அதனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமான சட்டத்தரணிகள் சிலரே தயாரித்து, தற்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அரசியலமைப்பின் 20ஆம் திருத்த தயாரிப்பிலும் இவர்கள் இதைத்தான் செய்தார்கள். அதனால்தான் 20ஆம் திருத்தம் அனுமதிக்கப்பட்டு 2 வருடங்களுக்கு முன்னரே நிராகரிக்கப்பட்டு, மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிப்பதாக அறியக்கிடைக்கிறது.
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அதற்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்வோம். குறித்த சட்டமூலத்தில் இருக்கும் அதிகமான உறுப்புரைகள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என்றார்.