கடந்த 2008 நவ.,26ல் மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது, பாகிஸ்தான் – அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தான் அரசு சரியாக வழக்கை நடத்தாத காரணத்தினாலும், குற்றச்சாட்டுகளை நிருபிக்க தவறியதாலும், ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது, பயங்கரவாதத்திற்கு எதிரான அந்நாட்டின் நிலைப்பாடு குறித்து தவறான தகவல் அனுப்பப்பட்டுள்ளதுடன், தனது நாட்டில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்ற பாகிஸ்தான் உறுதிமொழி அளித்தது பொய் என நினைக்கவும் தோன்றுகிறது.
ஹபீஸ் சயீத் கைது செய்து, அவரது குற்றங்களுக்காக பாகிஸ்தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அமெரிக்காவுடனான உறவிலும், சர்வதேச அளவில் பாகிஸ்தானின் பெயருக்கும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.