ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஊடாக பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை கோரும் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்துக்கு பல தரப்பிடம் இருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிவாலிப முன்னணிஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி இந்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்த எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் எல்லோரும்; ஒன்றுபட்டு ஒரே சக்தியாய் ஐக்கிய நாடு மனித உரிமைப் பேரவையிடம் நீதி கோரிக் குரல் கொடுப்போம். அரசியல் வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்புக்களும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். போர் முடிந்து பத்து ஆண்டுகள் சென்றும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமலே உள்ளன. காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் போனவர்களுக்கான தீர்வு மற்றும் பொறுப்புக் கூறலில் இருந்து எல்லாவற்றையும் அரசு தட்டிக் கழித்து வருகின்றது. ஐக்கிய நாடு மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கூட அரசு நடைமுறைப்படுத்தாமல் காலத்தை இழுத்தடித்து வருகின்றது. எனவே தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் வேறுபாடின்றி ஓரணியில் நின்று எமது உரிமைக்காக குரல் கொடுப்போம் – என்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிதமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இந்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது போர் முடிந்து 10 ஆண்டுகளாகியும் தெரியாமலுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனிதத்துவத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை ஐ.நா பாகாப்புச் சபை ஊடாக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் அல்லது சிறப்புக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படல்; வேண்டுமென வலியுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) கட்சியினராகிய நாம் பூரண ஆதரவு தெரிவித்துக் கொள்கின்றோம் – என்றுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணிபல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணியும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வடக்கு கிழக்கின் சகல பல்கலைக் கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளியை நோக்கி நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கும் மட்டக்களப்பில் எதிர்வரும் 19ஆம் திகதி செய்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கும் தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் – என்றுள்ளது.

