இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று முன்தினம் திடீரென இரகசியமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பில், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் அமெரிக்கத் தூதுவரிடம் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அமெரிக்கா மனித உரிமைகள் சபையிலிருந்து விலகினாலும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்கத் தூதுவர் அதற்குப் பதிலிறுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் அரச தலைவர் தேர்தலில், முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக அமெரிக்கத் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது குறிப்பிட்டார் என்று கூறப்பட்டது. அவருக்கு 30 சதவீதமானோரே ஆதரவு வழங்குகின்றனர் என்றும் அவர் கணித்தாராம்.
அரச தலைவர் தேர்தல்களின்போது, சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் முதன்மை வேட்பாளர்களுக்கு அவசியமானது என்பதால் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை இன மக்கள் மக்கள் தமது பிரச்சினையத் தீர்க்கவேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இவரும் மகிந்த அணியினரைப் போன்று கருத்துக்களைக் கூற முற்படுகின்றார்.
யதார்த்தபூர்வமாகச் செயற்பட்டால் நன்மைபயக்கும். ஆனால் அவர் அவ்வாறு செல்லத் தயாராக இல்லை என்று அமெரிக்கத் தூதுவர் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

