ஜனாதிபதியாக பதியேற்று சரியாக ஒரு வருடத்தின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்கான விசேட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.
இதன்போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையின் பெரும் பொருளாதார – அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்பதுடன், ஜனாதிபதியாக பதியேற்று எதிர்வரும் 21ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. இந்நிலையில், அன்றைய தினத்திலேயே பிரதமர் மோடியையும் ஜனாதிபதி ரணில் டெல்லியில் சந்திக்கிறார்.
எனவே, இருநாட்டு தலைவர்களுக்கும் இந்த சந்திப்பு பரஸ்பரமாக முக்கியமானதாகும். ஜனாதிபதி ரணிலின் டெல்லி விஜயத்துக்கு முன்னர் ஒப்பந்தங்கள் சிலவற்றில் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும், ஏற்கனவே இருதரப்புகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் மற்றும் டெல்லி விஜயத்தின் உள்ளடக்கம் போன்றவை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணிலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சரின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி ரணிலிடம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் டெல்லியின் எதிர்பார்ப்புகள் தொடர்பிலும் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. அது மாத்திரமன்றி டெல்லியில் முன்னெடுக்கப்படவுள்ள சந்திப்புகள் குறித்தும் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் அவர் விஜயம் செய்யும் ஆறாவது நாடாக இந்தியா உள்ளது. இதுவரை இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், எகிப்து, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.