கடந்த மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகம்மது, புல்வாமா பகுதியில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர்தியாகம் செய்தனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் முக்கிய முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி தகர்த்தது.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது, அமைதிக்கான முயற்சியாக இந்திய விமானி அபிநந்தனை அந்நாட்டிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையை வரவேற்பதாகக் கூறினார். மேலும், இரு நாடுக்களுக்கிடையே இருக்கும் பதற்றமான சூழலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரசா மே கேட்டு கொண்டார்.

