நாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உதவி போக்குவரத்து பரிசோதகராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு அவரின் பேஸ்புக் கணக்கில் தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற பதிவு காணப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
திரப்பனையில் 4 பேரும், ரக்வானையில் மூன்று பேரும், வவுணதீவு மற்றும் மீகலேவ பகுதிகளில் தலா இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனுடன் பண்டாரகம, பலாங்கொட, மாத்தளை, தெல்தெனிய, வத்தளை பகுதிகளில் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் திரப்பனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் வத்தளையில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து இரண்டு வோர்க்கி டோக்கி கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.