அதிகாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தோடு இயேசுபிரான் மானிட இனத்தின் மேம்பாட்டிற்காக அனுபவித்த வேதனைகளையும் உயிர்த் தியாகத்தையும் நினைவுகூரும் கிறிஸ்தவர்கள், மானிட சமூகத்திற்கு எதிராக எழும் வன்முறைகள், அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்க்க கற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலெயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் சகலவித இம்சைகளும் தொந்தரவுகளும் அற்ற அமைதியான ஒரு இடமாக உலகம் அமைகின்றபோதே, அது மனிதர்களின் அமைதியான தங்குமிடமாகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பின்னணியில் அன்பு, அமைதி, அந்நியோன்ய புரிந்துணர்வுடன் உருவாகும் மானிட சமூகம் குறித்த எதிர்பார்ப்புடனேயே உயிர்த்த ஞாயிறு உதயமாகின்றது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.