நூற்பாலைகளுக்கு தேவையான கோம்பர் பஞ்சு விலை கடந்த மாதத்தை விட கிலோவிற்கு ₹5 உயர்ந்துள்ளது. அதற்கேற்ப நூல் விலை உயர்த்த முடியாமல் நூற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பெரிய நூற்பாலைகளில் தூய பஞ்சு மூலம் உயர்தர நூல் தயாரிக்கப்படுகிறது. அப்போது கழிவாக வெளியேறும் பஞ்சு, கோம்பர் பஞ்சு என்றழைக்கப்படுகிறது. இத்தகைய கோம்பர் பஞ்சை கொள்முதல் செய்து, நூல் தயாரிக்கும் பணியில் தமிழகத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் ஈடுபட்டுள்ளன. கோம்பர் பஞ்சு மூலம் உற்பத்தியாகும் நூலை கொண்டு விசைத்தறிகளில் துணி நெய்யப்படுகிறது.தினசரி 7 லட்சம் கிலோ கோம்பர் பஞ்சு ெகாள்முதல் செய்யப்படுகிறது. அதில் இருந்து 5.60 லட்சம் லட்சம் கிலோ வரை நூல் உற்பத்தியாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கோம்பர் பஞ்சு விலை கிலோ ₹70ஆக இருந்தது. அப்போது ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தியாகும் நூல் விலை 20 ரகம் வார்ப் கிலோ ₹145க்கும், வெப்ட் ₹135க்கும் விற்கப்பட்டது. 30 ரகம் வார்ப் கிலோ ₹168க்கும், வெப்ட் ₹165க்கும், 25 ரகம் வார்ப் கிலோ ₹158க்கும், வெப்ட் ₹155க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், இம்மாத துவக்கம் முதல் கோம்பர் பஞ்சு விலை முந்தைய விலையை விட கிலோவிற்கு ₹5 அதிகரித்து, ₹75க்கு விற்கப்படுகிறது. பஞ்சு விலை உயர்விற்கேற்ப ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் நூல் விலையை உயர்த்தவில்லை. இது குறித்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (ஓஸ்மா) தலைவர் ஜெயபால் கூறியதாவது: ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் இருந்து நூல்களை வாங்கும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், அதை துணியாக தயாரித்து வட மாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். தற்போது அவர்கள் விற்பனை செய்யும் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் உள்ளது. இதற்கிடையில், கோம்பர் பஞ்சு விலை உயர்வால், நூல் விலையை உயர்த்த வேண்டும்.ஆனால், தற்போது விசைத்தறி துணிக்கு உரிய விலை கிடைக்காத சூழ்நிலையில், நூல் விலையை உயர்த்துவது விசைத்தறி ஜவுளிஉற்பத்தியாளர்களை பாதிக்கும் என்பதால், விலையை உயர்த்தவில்லை. எனினும் தற்போதைய நூல் விலை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளோம். கோம்பர் பஞ்சு விலை குறைந்தால் சமாளிக்கலாம் என்றார்.