எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றலுடன், இன்று காலை 10.00 மணிக்கு தாமரை தடாக அரங்கில் இந்த ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் சகல கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியிலும் அங்கம் வகிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அதற்கமைய மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உருமய, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடனும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
எனினும் புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பாக தேர்தல் காலத்திலேயே அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

