பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (08) முற்பகல் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பண்பாடற்ற முறையில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதை காரணமாகக் கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு விரும்பத்தகாத விடயங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்க உள்ள மாணவர் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சவாலுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகளின் பின்னால் சில அதிகார மோகம் பிடித்த அரசியல் அமைப்புக்கள் செயற்படுவதாகவும் நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் இந்தப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புக்களை
நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கனணி மற்றும் கைத்தொலைபேசியின் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி , இந்த விரும்பத்தகாத நிலைமைகள் குறித்து அரசாங்கம் விரிவாகக் கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியடைவதைப்போன்று சிறந்ததோர் சமூகத்தில் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தும் சமூகப் பொறுப்புக்கள் குறித்துத் தெளிவுடன் செயற்படும் பரீட்சை போன்று வாழ்க்கையிலும் சித்திபெறும் எதிர்கால தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு தமது பொறுப்புக்களை அனைவரும் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.