கிளிநொச்சி மாவட்த்தில் இரணைமடுக் குளத்தினை நம்பி மேற்கொண்ட 900 ஏக்கர் நெற் செய்கைக்கான நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் உள்ள தடையை நீக்க ஆவண செய்யுமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணைமடுக் குளத்தின் கீழ் இந்த ஆண்டின் சிறுபோக நெற்செய்கைக்காக 900ம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டது. அவ்வாறு பயிரிடப்பட்ட நெல்லிற்கான நீர்ப்பாய்ச்சல் இடம்பெறும்வேளையில் ஓர் புதிய நெருக்கடி எதிர் கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக பயிரிடப்பட்ட நெல்லிற்கு இன்னமும் இரண்டு தடவைகள் நீா்பாசனம் தேவையாகவுள்ளது.இந்த நிலையில் இரணைமடுக் குளத்தினுள்ளும் 3 அடி நீர் மட்டுமே கையிருப்பிலும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது குளத்தில் உள்ள 3 அடி நீரை சிக்கனமாக உபயோகிப்பதன் மூலம் குறித்த பயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை காணப்படுகின்றபோதும் குளத்தில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பிரதான வாய்க்கால்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதனாலேயே நீர் வெளியேறுவதில் தடை ஏற்படுவதாகவே விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே குறித்த குளத்தின் வாய்க்கால்ப் பகுதிகளில் தேங்கி கிடக்கும் சகதியை உடன் அகற்றித்தருமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.