தங்கள் நெருங்கிய நண்பரான சம்பத் மனம்பேரியை காவல்துறையிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு நாமல் ராஜபக்சவை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
மித்தெனிய போதைப்பொருள் ராசாயன விவகாரம் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் கைது செய்யப்பட உள்ளார்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான விசாரணைகள் இப்போது தொடங்கியுள்ளதால், எதிர்காலத்தில் யார் கைது செய்யப்படுவார்கள் என்பது சம்பந்தப்பட்ட விசாரணைகளின்படி காவல்துறையினரால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் நீதிமன்றங்கள் மூலம் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பு கொண்ட மொட்டுக் கட்சி
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் நளிந்த, “தற்போது காவலில் உள்ள மற்றும் கைது செய்யத் தேடப்படும் இரண்டு நபர்களும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடையவர்கள்.

இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட உடனேயே, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒருவரின் கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்தது.
அந்தச் செயல்பாட்டின் மூலம் அந்த நபரின் ஈடுபாட்டை சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒருபுறம் ஒப்புக்கொண்டுள்ளது. ஏனென்றால் கட்சியின் சில அமைச்சர்கள் சிறையில் இருந்தபோதும், அவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்யவில்லை.
மனம்பேரி குடும்பம்
சம்பத் மனம்பேரி ரவிராஜ் கொலையில் சந்தேக நபராக உள்ளார். அவர் காவல்துறையிலும் பணியாற்றியுள்ளார். அவர் உளவுத்துறையிலும் சிறதுகாலம் பணியாற்றியுள்ளார்.அவர் மீது மற்றொரு குற்றவியல் வழக்கு உள்ளது.

தங்காலை மற்றும் மித்தெனியவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மனம்பேரி குடும்பத்துடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்தனர் என்பது இப்போது நமக்குத் தெரியும்.
இப்போது அவரது கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்வது மாத்திரம் போதாது. தங்கள் நெருங்கிய நண்பரை காவல்துறையிடம் ஒப்படைத்து இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது நாமல் உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் பொறுப்பு.” என்றார்.