அரசியலுக்கு முன்னுரிமையளிக்காமல் நாட்டுக்கு முன்னுரிமையளித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த கடுமையான தீர்மானங்களினால் நாடு குறுகிய காலத்தில் நிதி வங்குரோத்து நிலையில் இருந்து மீட்சிப்பெற்றது என்பதை மறக்க கூடாது. அவரிடமிருந்து பலவிடயங்களை கற்றுக்கொண்டேன் என நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.
பொருளாதார மீட்சிக்காக நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி எடுத்த சகல தீர்மானங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். எமது பணிகளில் அவர் ஒருபோதும் தலையிடவில்லை. சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளித்தார் என்றும் குறிப்பிட்டார்
சேவையில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
2022ஆம் ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் பூகோள மற்றும் தேசிய காரணிகளால் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இதனால் நிதி வங்குரோத்து நிலையை எதிர்கொள்ள நேரிட்டது.
இவ்வாறான நிலையில் தான் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளராக என்னை நியமித்து. நெருக்கடியான சூழலில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களை எடுக்குமாறு பணித்தார்.
எமது தீர்மானங்களுக்கு அரசியல் கட்டமைப்பின் ஊடாக முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். இச்சந்தர்ப்பத்தின் கடுமையான நெருக்கடிகள் மற்றும் வெளியக அழுத்தங்களுக்கு உள்ளானேன்.இருப்பினும் அவற்றை தனிப்பட்ட முறையில் சமாளித்துக் கொண்டேன்.
நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டுச் செல்ல நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இலவசக் கல்வியின் ஊடாகவே நான் முன்னேற்றமடைந்தேன். ஆகவே நாடு மிக மோசமான நிலையை எதிர்க்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு சேவையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டேன்.
2022ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.இவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பானது என்றே குறிப்பிட வேண்டும். நெருக்கடியான நிலையில் எதிர்கால அரசியல் குறித்து அக்கறை செலுத்தாமல் நாட்டை முன்னிலைப்படுத்தி கடுமையான தீர்மானங்களை எடுத்தார் அதன் பிரதிபலனால் தான் நாடு குறுகிய காலத்தில் நிதி வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டது.இதனை ஒருபோதும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து பணிபுரிந்தபோது பல விடயங்களை கற்றுக்கொண்டேன். நெருக்கடியான சூழ்நிலையில் தற்றுணிபுடன் தீர்மானம் எடுப்பது எந்தளவுக்கு அத்தியாவசியமானது என்பதை விளங்கிக்கொண்டேன்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிதி அமைச்சின் செயலாளராக பதவியேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டேன்.
பொருளாதார மீட்சிக்காக அதுவரையான காலப்பகுதியில் எடுத்த சகல நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். எமது பணிகளில் அவர் ஒருபோதும் தலையிடவில்லை. சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளித்தார் என்றார்.