Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்

May 15, 2019
in News, Politics, World
0

குமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி விட்டது.

1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இதேநாள் குறிகட்டுவான் துறைமுகத்துக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

நெடுந்தீவின் மாவலித்துறையிலிருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு பயணிகளுடன் புறப்பட்டாள் குமுதினி. அவள் பயணித்த சிறிது நேரத்தில் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டாள். அவள் சுமந்து சென்ற 36 பேர் படுகொலை செய்யப்பட்ட அந்தக் கொடூரத்தின் 34 ஆண்டு ஈரநினைவு நாள் இன்றாகும்.

குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் அறுவர் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வொருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிச் சாய்த்தனர். சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன.

பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க பெரும் பங்காற்றியவள் குமுதினி. இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குமுதினி 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டாள்.

நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டாள் குமுதினி.

ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர்.

இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது. இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு.

கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர்.

இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.: “எனது தலையில் அடித்தார்கள்.

நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்குமேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.”

சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலையில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் சரவதே மன்னிப்புச் சபை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது. 71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை இலங்கை அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி சர்வதேச மன்னிப்புச் சபை வற்புறுத்தியது.

படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் “இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எது வித ஆதாரமும் இல்லை,” என்றார் அமைச்சர் லலித் அத்துலத்முதலி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது.

நெடுந்தீவு மக்களின் வாழ்வில் குமுதினிப்படுகொலை மறக்க முடியாதது. ஆண்டுதோறும் இப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக நிலைத்துள்ள குமுதினிப்படுகொலையை உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களும் நினைவுகூறுகின்றனர்.

Previous Post

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானம்

Next Post

நோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை

Next Post

நோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures