சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான ‘ஜெய் பீம்’ எனும் திரைப்படத்தின் திரைக்கதை, நூல் வடிவமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நூல் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் விற்பனை பிரிவில் இடம்பெற்றிருக்கிறது.
தமிழ் சூழலில் கடந்த பல தசாப்தங்களாக திரையுலக நடிகர்கள் மற்றும் ஆளுமைகளின் ஆதிக்கம் அதிகம். அனைத்து தரப்பு மக்களின் தேவையறிந்து, அதனை பொழுதுபோக்கு அம்சங்களுடன் அளிப்பதில் தமிழ் திரையுலகம் இன்றளவிலும் முன்னணியில் இருக்கிறது என்பது பல படைப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் அதிர்வை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஜெய் பீம்’.
சட்டத்தரணியும், நீதியரசருமான சந்துரு அவர்களின் வாழ்க்கை அனுபவத்தில் எதிர்கொண்ட ஒரு வழக்கை மையப்படுத்தி உருவான இந்த படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்ததுடன், படத்தினை தயாரித்து வெளியிட்டார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய சாதனையை படைத்த இந்த படைப்பின் திரைக்கதை, தற்போது நூலாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர் சமஸின் பங்களிப்பு மற்றும் படக்குழுவினரின் நேர்காணல்களுடன் உருவாகி இருக்கும் இந்த நூல் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் அங்கம் வகிக்கிறது.