Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நிலைமையை சமாளிப்பதற்கான, மு.கா.வின் இரு நகர்வுகள்

January 29, 2018
in News, Politics, World
0

யாராவது ஒருவர் வழிதவறியோ, தவறான வழியிலோ அல்லது பிழையான வழிகாட்டலிலோ பயணிக்க நேரிட்டால் போக வேண்டிய இடத்தை சென்றடைய முடியாது போய்விடும். அவ்வாறில்லாத பட்சத்தில் அந்த வழி அவரை ஒரு முட்டுச்சந்தில் கொண்டு சென்று நிறுத்தும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் போன வழியில் சிறுதூரம் திரும்பிவந்தே, சரியான வழிக்கு திரும்ப வேண்டியிருக்கும்.

கிழக்கில் எழுந்திருக்கின்ற களநிலைச் சவால்களை சமாளிப்பதற்காகவும் புதுவிதமான தலையிடிக்கு மருந்து தடவுவதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் கடந்த சில நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள இரு நகர்வுகள் மேற்குறிப்பிட்ட உவமானத்தையே ஞாபகப்படுத்துகின்றன. ஆனால், சரியான விடயத்தைப் பாராட்டுபவர்களுக்கே தவறை விமர்சிக்கின்ற உரிமையும் இருக்கின்றது என்ற அடிப்படையில், இந்த நகர்வுகள் உண்மைக்குண்மையாக நேர்மையாகவும் உளத்தூய்மையுடனும் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது பாராட்டப்பட வேண்டியது.

உலக வரலாறு நெடுகிலும், சர்வதேச அரங்கில் தமது இராஜதந்திரத்தை, போர் உத்தியை, வியூகத்தை அவற்றில் இருக்கின்ற குறைபாடுகளை உரிய காலத்தில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த தவறிய எல்லா அரசியல், விடுதலைப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன. தமது பயண வழி சரியா பிழையா என்பதை நின்றுநிதானித்து பயணித்த எல்லா முன்னெடுப்புக்களும் வெற்றியடைந்திருக்கின்றன.

நெடுங்காலமாக மு.கா.மீதான குற்றச்சாட்டுக்களையும் அந்தக் கட்சி விட்ட தவறுகளையும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தவில்லை என்ற கருத்தாடல்கள் முஸ்லிம்களிடையே மட்டுமன்றி ஏனைய சமூகத்தவரிடையேயும் வியாபித்திருந்த ஒரு சூழலில் பல பின்னடைவுகளுக்குப் பிறகு இரண்டு அடிகளை றவூப் ஹக்கீம் தலைமையிலான மு.கா.கட்சி முன்னோக்கி எடுத்து வைத்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கிடையில் இந்த முன்னகர்வுகளுக்குப் பின்னால் சில சூட்சுமங்களும் ஒளிந்திருப்பதையும் உன்னிப்பாக நோக்குவோர் அறிவர்.

முதலாவது விடயம் கிழக்கு மக்களை தரக்குறைவாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவருமான சபீக் ரஜாப்தீனை அப்பதவிகளில் இருந்து இராஜினமாச் செய்ய வைத்தமை. இரண்டாவது விடயம், தற்காலிகம் எனக் கொடுக்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எச்.எம்.சல்மானிடமிருந்து பெற்று, அதனை அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க முற்பட்டமை.

ஷபீக் விவகாரம்
இவ்விரு நகர்வுகளினதும் கனவான் தன்மையை அறிந்து கொள்வதற்கு இதற்குப்பின்னால் இருக்கின்ற களச்சூழலையும் பின்புலத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாதது. இவ்விரு நகர்வுகளும் வரவேற்கத்தக்கவை என்றாலும் தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் கிழக்கின் அரசியலை மையமாகக் கொண்டவையாக இவை காணப்படுகின்றன என்ற அடிப்படையை தவிர்த்து, இவ்விவகாரத்தை நோக்க முடியாது.

மு.கா.வின் தலைமைத்துவத்திற்கு எதிரான கோஷங்களும் பிளவுகளும் வலுவடைந்திருந்த நிலையில் உள்ளுராட்சி சபை தேர்தல் நடைபெறுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அதுவும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மு.கா.வின் வாக்கு வங்கிகளில் கணிசமான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவே அவதானிகள் முதற்கொண்டு சாதாரண பொதுமகன் வரை கூறுவதை காணமுடிகின்றது.

அதற்காக மு.கா. முற்றாக தோல்வியுற்றுவிடும் என்றோ மாற்று அணியினர் எல்லா இடங்களிலும் வெற்றிவாகை சூடுவார்கள் என்றோ கருத இயலாது என்றாலும், நாம் மேற்குறிப்பிட்டது போல அந்தக் கட்சி தமது போக்குகளை மீள்பரிசீலனை செய்ய தவறியதன் விளைவாக பொதுவாக மக்கள் அதிருப்தியடையத் தொடங்கியதால் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுத் தளமும் கோட்டைகளும் சில மாறுதல்களை சந்திக்கும் நிலையிருந்தது. இதை தலைவர் ஹக்கீமும் அறிந்திருந்ததுடன் பலருடன் இதுபற்றி அளவளாவியுமிருக்கின்றார்.

இந்த நிலையில்தான் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருந்த முன்னாள் எம்;.பி.யும். நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உப தலைவருமான சபீக் ரஜாப்தீன் முகநூல் உரையாடல் ஒன்றில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களை மட்ட ரகமாக எழுதினார். இது இக்கருத்து கிழக்கு மக்களின் மனதை புண்படுத்துவது மட்டுமல்ல, மு.கா. ஸ்தாபக தலைவர், அந்தக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்;, முன்னாள் முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் எதிரானதாக அமைந்தது. இதற்கெதிராக எழுந்த குரல்களின் நியாயத்தன்மையை வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் மக்கள் கிழக்கிலுள்ள எமது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

முகநூல் உரையாடல் ஒன்றில் சபீக் ரஜாப்தீன் குறிப்பிட்டிருந்த விடயங்கள் மிகவும் அளவுகடந்த பிராந்தியவாதத்தையும் மேட்டுக்குடி மனநிலையையும் வெளிப்படுத்தியது எனலாம். இதை எந்த சூழ்நிலையில் அதை நான் கூறினேன் என்று வியாக்கியானம் அளித்தாரே தவிர, தான் இந்த வார்த்தைகளை பிரயோகிக்கவே இல்லை என்று அவர் மறுக்கவில்லை என்பது கவனிப்பிற்குரியது.

மட்டரகமான கருத்து
‘கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன் தொழில்பிச்சை கேட்டு வருபவர்கள், ‘கிழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் வாசல் கதவடியில் நீங்கள் வந்து கிடப்பீர்கள்’ ‘உங்களுக்கு நல்ல தலைவர் இருந்தால் ஏன் எமக்குப் பின்னால் நிற்கின்றீர்கள்’ ‘நாம் ஆள்பவர்கள் நீங்கள் ஆளப்படுபவர்;கள்’………. என்றெல்லாம் அவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் கிழக்கிலுள்ள மக்களும் செயற்பாட்டாளர்களும் கொதித் தெழுந்தனர். கிழக்கிற்கு வெளியே பிறந்து, கிழக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அதன் வரப்பிரசாதங்களையும் சுகிப்பவர் இவ்வாறு கூறுவதை கட்சி வேறுபாடுகளின்றி எல்லோரும் எதிர்த்தனர். ஷபீக் ரஜாப்தீன் தன்னிலை விளக்கமளித்திருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளாதததால் கடைசியில் மன்னிப்பு கேட்க வேண்டியேற்பட்டது.

கிழக்கு முஸ்லிம்கள்;தான் முஸ்லிம் காங்கிரஸை உதிரம் சிந்தி வளர்த்து அதன் தலைமையை வேறு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுத்திருக்கின்றார்கள். அதுதான் இன்று பலருக்கு வாழ்வளித்திருக்கின்றது. கிழக்கில் தலைமை இல்லை என்று அவர்கள் கொடுக்கவில்லை. ‘அவர்களாக விரும்பியே பிராந்தியவாதங்கள் கடந்து இந்த தலைமைத்துவ கிரீடத்தை 17 வருடங்களுக்கு முன்னர் றவூப் ஹக்கீமுக்கு சூட்டினார்கள்’ என்பதையும் தலைவரே பகிரங்கமாக ஒரு மேடையில் கூறியிருந்தார்.

எனவே, கிழக்கு மக்கள் மு.கா.விடம் உதவிகளை பிச்சையாக கேட்டு வரவில்லை. உரிமையோடுதான் கேட்டு வருகின்றார்கள். கொடுக்க வேண்டியது தலைவரினதும் தளபதிகளினதும் கடப்பாடு. அடுத்த விடயம், எல்லாவற்றுக்கும் ஆமா சாமி போடும் கிழக்கு அரசியல்வாதிகள் சிலரைப் பார்த்து தவறாகப் புரிந்து கொண்டதாலோ என்னவோ கிழக்கு மக்கள் ஆளப்படுபவர்கள் என்று ஷபீக் சொல்லியிருந்தார். ஆனால், அவரது பதவி பறிக்கப்பட்ட போது ஆள்வது யாரென்று அவருக்கு விளங்கியிருக்கும்.

இவரது கருத்தில் கிழக்கில் இருந்து நல்ல தலைவர்கள் வரவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தது அடிப்படையற்ற, படுபிற்போக்குத்தனமான விடயமாகும். கிழக்கில் இருந்து கொண்டு கொழும்பையும் அதற்கப்பாலும் ஆட்டிவைத்த மர்ஹூம் அஷ்ரஃப் தொடக்கம் கிட்டத்தட்ட இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் திருகோணமலையில் இருந்து வழிநடாத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் வரை எல்லோருடைய உணர்வுகளையும் தகுதியையும் கேலிக்குள்ளாக்கின்ற கருத்தாகவும் இது அமைந்தது. எனவே அவருக்கெதிரான குரல்கள் பலமாக ஒலித்தன.

இது தற்செயலாக நடந்திருந்தாலும் அல்லது திட்டமிட்டு நடந்திருந்தாலும் ஷபீக் ரஜாப்தீன் வார்த்தைகளை கடுமையாக தவறவிட்டு விட்டார். அதை அள்ளுவதற்கு முயற்சித்தும் தோல்வியடைந்தார். அத்துடன், மிக முக்கியமாக கிழக்கில் ஏற்கனவே பல தலையிடிகளை எதிர்கொண்டுள்ள மு.கா. தலைவருக்கு இது புதியதலையிடியாக உருவெடுத்தது. கிழக்கு மக்களை மட்டமாக பார்க்கும் போக்கு மு.கா. தலைவரிடமும் அவரைச் சார்ந்தவர்களிடமும் இருக்கின்றது என்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டதால், ஹக்கீம் விரைந்து செயற்பட்டு ஷபீக் ரஜாப்தீனை இராஜினாமாச் செய்ய வைத்தார்.

இது நல்ல விடயமே. இதையே மக்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் வெற்றிடமான பதவிக்கு கிழக்கைச் சேர்ந்த யாரையாவது நியமித்து நிலைமையை இன்னும் ஹக்கீம் சமாளிப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவர் தனக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் எம்.பி. சல்மானுக்கே சாணக்கியமான முறையில் நீர்வழங்கல் சபை பிரதித்தலைவர் பதவியை வழங்கினார். கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை எனத் தெரிகின்றது.

றவூப் ஹக்கீமின் இந்த அதிரடி நடவடிக்கை கட்சித்தலைவர் மீதான விமர்சனங்களையும் மேலும் சரிவு ஏற்படுவதையும் ஓரளவுக்கு தடுத்திருக்கின்றது என்றாலும் அது முற்றுமுழுதாக சாத்தியப்படவில்லை என்பதையும் கிழக்கைச் சேர்ந்தவர்களல்லாத, கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள பலரது எண்ணப்பாடு இதுதான், அவர்கள் கிழக்கு மக்களை இவ்வாறுதான் பார்க்கின்றார்கள் என்ற மனப்பதிவை, சபீக்கின் பேஸ்புக் பதிவு ஆழமாக ஏற்படுத்தி விட்டதை மறுப்பதற்கில்லை.

தேசியப்பட்டியல் நியமனத்தை கொடுப்பதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கு அதுவும் ஒரு உடனடிக் காரணியாக அமைந்திருக்கலாம் என்றே அனுமானிக்க முடிகின்றது. அத்துடன், இப்படிப்பட்ட நபரின் பதவி பறிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் தேர்தல் முடிந்த பிறகு ஏதாவது பதவி வழங்கப்பட மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை என்பதையும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

தேசியப்பட்டியல் பரிந்துரை
இவ்வாறான நிலையிலேயே, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையை சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தலைவர் ஹக்கீம் எடுத்திருக்கின்றார். ஷபீக் ரஜாப்தீன் சர்ச்சைக்கு முன்னதாக சல்மான் எம்.பி. இராஜினாமாச் செய்ததையடுத்து வெற்றிடமான ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் பதவிக்கே நஸீர் பிரேரிக்கப்பட்டிருக்கின்றார்.

இது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் ஒரு யுகாந்திரக் கனவு. சுமார் 15 வருடங்களாக தேசியப்பட்டியல் ஆசைகாட்டி இவ்வூர் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இந்தப் பதவியை 2015 ஆம் ஆண்டாவது அட்டாளைச்சேனைக்கு கொடுத்திருக்க வேண்டும். அல்லது வேறு ஒரு பொருத்தமான ஊருக்கு வழங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த இரண்டரை வருடங்களில் அதனூடாக அப்பகுதி மக்கள் நன்மையடைந்திருப்பார்கள் என்ற அபிப்பிராயமும் இருக்கின்றது.

எவ்வாறிருப்பினும், இப்போதாவது அப்பதவியை கொடுத்திருப்பதானது நன்றிக்குரியதும் பாராட்டுக்குரியதும். மு.கா. தலைவர் எதிர்பார்த்த அளவுக்கு தேர்தல் வாக்களிப்பில் இது தாக்கம் செலுத்தாவிட்டாலும் தளம்பல் நிலை வாக்காளர்களின் தீர்மானத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

ஆனால், இந்த கட்டுரை அச்சேறும் வரைக்கும் ஏ.எல்.எம்.நஸீர் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை. தலைவர் ஹக்கீம் இப்பதவியை அவருக்கு கொடுக்க சிபாரிசு செய்திருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் தேர்தல் காலத்தில் (தேசியப்பட்டியல்) நியமன எம்.பி. வழங்கப்படுவதற்கு முட்டுக்கட்டைகள் இடப்படலாம் என்ற அனுமானங்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்ற சூழலில், தேர்தல்கள் ஆணையாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்ததாகவோ இந்நியமனத்திற்கான வர்த்தமானி வெளியானதாகவோ உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனாலும், சத்தியப்பிரமாணம் தேர்தலுக்கு முன்னதாகவோ அதன் பின்னரோ இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதையும் சொல்லாமல் விட முடியாது.

ஏற்கனவே எம்.ரி.ஹசனலிக்கு சல்மான் எம்.பி. இராஜினாமா செய்ததாக கடிதத்தை காட்டி ஏமாற்றியது போல் இப்போதும் ஹக்கீம் ஏதாவது சூட்சுமம் செய்ய விளைகின்றாரா என்று அக்கட்சியின் அதிருப்தி அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், இனி அவ்வாறு செய்ய முடியாத நிலைக்கு கட்சித் தலைவர் வந்திருக்கின்றார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால் இதற்குள் இன்னும் சூட்சுமங்கள் இருக்க நிறையவே இடமுள்ளது.

ஆனால் ஒன்று
இவ்விரு நகர்வுகளும் மு.கா.வின் அண்மைக்கால செயற்பாட்டில் மிக முக்கியமான சம்பவங்களாக குறிப்பிட வேண்டும். அதுமட்டுமன்றி, யார் என்ன சொன்னாலும் அந்தக் கட்சியின் வியூகமும் தலைவரின் சாணக்கியமும் கடைசிக் கட்டத்திலாவது ஒரு அங்குலமேனும் மக்கள் சார்பு அரசியலில் முன்சென்றிருக்கின்றது என்பதே நிதர்சனம்.

ஆனால், இது தேர்தல்காலம் என்பதால் சபீக்கிற்கு எதிரான நடவடிக்கையும் தேசியப்பட்டியல் எம்.பி. நியமனமும் அட்டாளைச்சேனைக்கு எம்.பி. என்ற அறிவிப்பும் வழக்கமாக வாக்களிப்பு காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், உதவிகள், நியமன வாக்குறுதிகள் போல இதுவும் அமைந்துள்ளதா எனப் பார்க்கப்படுகின்ற ஒரு சூழலும் கிழக்கில் காணப்படுகின்றது. கடைசித் தருணத்தில் சரியான பாதையை நோக்கி ஹக்கீம் திரும்பியிருப்பதாகவும் தெரிகின்ற போதிலும், சற்று காலம்பிந்தி தேர்தல் காலத்தில் இந்த நகர்வுகளை மேற்கொண்டதால் இது வாக்குகளை பெறுவதற்கான உத்தியே என்றும் ஒரு தரப்பினர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

எனவே, மு.கா. தலைவர் எப்போதோ மேற்கொண்டிருக்க வேண்டும். தனது கட்சி மீதான விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் தமக்கு ஒரு தேவை வருகின்ற போது, சிக்கல் வருகின்ற போது மட்டும் கவனத்திற் கொள்பவராக அல்லாமல் பல மாதங்கள், வருடங்களுக்கு முன்னரே இவ்வாறான எத்தனையோ தீhமானங்களை எடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மு.கா.வுக்குள் இத்தனை பிளவுகளும் வந்திருக்காது, உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான இத்தனை பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கவும் தேவையில்லை.

Previous Post

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தேர்­தல் அறிக்­கை

Next Post

தேயிலை, மிளகு மீள்ஏற்றுமதியை உடனடியாகத் தடைசெய்ய நடவடிக்கை

Next Post

தேயிலை, மிளகு மீள்ஏற்றுமதியை உடனடியாகத் தடைசெய்ய நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures