நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே இருப்பதாக அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எந்தக் கட்சி பிரேரணையைக் கொண்டு வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க நாம் தயார்.
இந்நிலையில் தற்போது மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றது.
20 ஆவது திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிப்பதற்கு பல கட்சிகளுடன் மக்கள் விடுதலை முன்னணி கலந்துரையடவுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
எனவே எதிர்காலத்தில் இவ்விடயம் குறித்து நாமும் அக்கட்சியுடன் கலந்துரையாட இருக்கின்றோம்” என அமைச்சர் பீ. ஹரிசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.