எதிர்கால சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை வீரர்களைத் தயார்படுத்தும் வகையில் நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தத் தொடர்களில் விளையாட நியூஸிலாந்து ஏ அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
நடந்து முடிந்த ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பிரகாசிக்கத் தவறிய கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏனைய இலங்கை வீரர்களுக்கு இந்தத் தொடர்கள் பரீட்சைக் களமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேவேளை இந்தத் தொடர்களில் இளம் மற்றும் முன்னேறிவரும் கிரிக்கெட் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
நியூஸிலாந்து ஏ அணிக்கும் இலங்கை தெரிவு அணிக்கும் இடையில் மூன்று ஒருநாள் போட்டிகளும் இரண்டு நான்கு நாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஏப்ரல் 5ஆம் திகதி நடைபெறும்.
தொடர்ந்து ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஏப்ரல் 8, 11ஆம் திகதிகளில் இரண்டாவது, மூன்றாவது ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.
ஒருநாள் தொடர் முடிவடைந்ததும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும்.
முதலாவது போட்டி ஏப்ரல் 16 முதல் 19ஆம் திகதிவரையும் இரண்டாவது போட்டி ஏப்ரல் 23 முதல் 25ஆம் திகதிவரையும் நடைபெறும்.
