இலங்கையின் தென் மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய , மாத்தறை , எல்பிட்டிய, கம்புறுபிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய பிரதேசங்களில் அதிகளவான வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார், அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்றீறியா போன்ற மூன்றுவைகை வைரஸ்கள் காரணமாக தென் மாகாணத்தில் ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது.
இதில் இன்புளுவென்ஸா எனும் வைரஸ் கொடியதாகும். இவ்வைரஸ் தொற்று காரணமாகவே தென் மாகாணத்திலும் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளான 400 க்கும் மேற்பட்டோர் தென்மாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு இன்னும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த வைரஸ் தொற்றானது இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன் பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்களை இலகுவாக தாக்குகின்றது.
எனவே இத்தகையோர் குறிப்பாக பொது இடங்களில், மூக்கு, வாய் என்பவற்றுக்கு பாதுகாப்பு அணிகலன்களை அணிவதோடு உடற்சுகாதாரத்தை பேண வேண்டும்.
வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் 1 மீட்டர் துாரத்திலிருந்து மற்றொருவருடன் உரையாடினால் கூட ஏனையோரும் இலகுவாக நோய் தொற்றுக்குள்ளாக நேரிடும்
மூன்று நாட்களுக்கு மேற்பட்ட காய்ச்சல், தலைவலி, உடற்நோவு போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும். அவ்வாறு தொடர்ச்சியாக காய்ச்சல் நீடிக்குமாயின் இரத்த பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
இத்தகைய வைரஸ் தொற்றுக்களை தடுப்பதற்கான மருந்துகள் இதுவரையில் கண்டுப்பிடிக்கப்படவில்லை. எனவே இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்திரம் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் தொற்று ஏனைய பிரதேசங்களுக்கும் பரவாத வண்ணம் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு இனங்காணப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான 10 ஹைப்லோ ஒட்சிசன் இயந்திரங்கள் காலி ,கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு 30 மில்லியன் ரூபா நிதி சிகிச்சை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைத்தியர்கள் கோரும் அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.