உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் கல்வி, திறமை, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். இவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும். எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும்.
புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10), ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாடாக இன்று பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது, இன்றுள்ள சவால்களில் ஜனாதிபதியினால் கொவிட் சவால்களை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்துள்ளது. ஏனைய சகல சவால்களும் இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவையாகும்.
செயலணிகளை அமைத்து சவால்களை வெற்றிகொள்வதாக அரசாங்கம் ஒரு சித்திரத்தை காட்டி வருகின்றது. கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த செயலணி ஒன்றை உருவாக்கினர்.
அத்தியாவசிய பொருட்களை பங்கிடும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது,வறுமை ஒழிப்பை மேற்கொள்ள வேறொன்று, பொருளாதார மீள் எழுச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என ஒரு செயலணி உருவாக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்க செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் சட்டம் இயற்ற இப்போது புதிதாக ஒரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயலணிகள் ஒரு பக்கமும் சட்ட நிறுவனங்கள் இன்னொரு பக்கமும் இயங்கிக்கொண்டுள்ளன. இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் மக்களின் வரிப்பணமே செலவழிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல செயலணிகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் குறித்து எம்மத்தியில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இவர்கள் செயலணிகளுக்கு தகுதியானவர்களா என்ற கேள்வி எழுகின்றது.
கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கு உதவி செய்ததற்காக இவ்வாறு செயலணிகளுக்கு இவர்கள் நியமிக்கப்படுகின்றார்களா என்ற கேள்வியையே கேக்கவேண்டியுள்ளது.
செயலணிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றால் அமைச்சரவைக்கு இருக்கும் பொறுப்புகள் என்ன?
இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை நாட்டில் பரப்பியுள்ளனர். இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அரசியலுக்காக பயன்படுத்துவதை நாம் நிராகரிக்க வேண்டும்.
சகல இனத்திலும் ஒரு சிறிய குழு இனவாதத்தை பரப்புகின்றது, ஆனால் அதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என அடையாளப் படுத்தினாலும் பெரும்பாலான தமிழ் புலம்பெயர் அமைப்புகள் நாட்டை நேசிக்கும் தரப்பாகவே உள்ளனர். எனவே புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் உயரிய கல்வி மட்டத்தில், திறமையான, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். அவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும், எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும்.
இந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது, இது எங்கு சென்று முடியும் என தெரியவில்லை, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மக்கள் வீதிக்கு இரங்கி போராடும் நிலைமை உருவாகும். இவை அனைத்துமே இயற்கையாக உருவான பிரச்சினை அல்ல, தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளே எம்முன் உள்ளது.
எனவே இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனை கருத்தில் கொண்டு பொருத்தமான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]