தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அவசரப்படாமல் நிதானத்துடன் சிந்தித்து எமது முடிவை எடுப்போம். மற்றவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்பதற்காக நாம் அவசரப்படவேண்டிய தேவை இல்லை. அவர்கள் எமது முடிவைப் பார்த்து கட்சி தாவுவதற்காகவே அவசரப்படுகின்றார்கள். நாம் எமது மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு முடிவெடுக்கவேண்டிய தேவை உள்ளது.
– இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவை சந்திப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு எமது தலைவர் சட்டத்துக்கு முரணாக – அரசமைப்புக்கு முரணாக – ஜனநாயக விரோதமாக – கிடைக்கப்பெற்ற பிரதமர் பதவியை நாம் ஏற்கவில்லை. நாம் இப்பவும் உங்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே பார்க்கின்றேன். அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் உங்கள் வீட்டில் சந்திப்பை வைக்கலாம் என்றார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முன்னர் நாட்டின் பிரதமரை தன்னுடைய இஷ்டத்துக்கு மாற்றுகின்ற அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது. முன்பு அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. 19 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர் அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. ஆகவே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியமை சட்டவிரோதமானதே.
நாடாளுமன்றத்தில் நேற்று கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதில் சபாநாயகர் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றைக் கூட்டுவதாக உறுதியளித்துள்ளார். கட்சித் தலைவர்கள் அனைவரும் நாடாளுமன்ரறக் கூட்டுமாறு வலியுறுத்தினோம். நாடாளுமன்றைக் கூட்டுவதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் தேவையில்லை. இதில் முடிவெடுக்கவேண்டியவர் சபாநாயகரே! நாளைமறுதினம் சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்டத் தவறுவாராயின் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் நாம் ஆராய்வோம்.
ஆகவே, நாம் மற்றவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்று அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கமுடியாது. மிகவும் நிதானத்துடன் சிந்தித்து செயற்படுவோம். அவர்கள் எமது முடிவைப் பார்த்து கட்சி தாவுவதற்காக அவசரப்படுகின்றார்கள். எமது முடிவு கொள்கை சார்ந்ததாகவும் ஜனநாயகம் சார்ந்ததாகவும் எமது மக்களின் நலன் சார்ந்ததாகவும் அமையும். இரு தரப்புகளுடனும் பேச்சு நடத்தியுள்ளோம். கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இதுதொடர்பில் பேசி தீர்க்கமான முடிவை எடுப்போம். – என்றார்.