அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகங்களை விமர்சிப்பதை விடுத்து ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு இடம்பெறும் நல்லவைகள் தொடர்பிலும் நாம் பாராட்டவேண்டியது அவசியம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாமல் உயன பூங்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாமல் உயன பூங்கா முன்னேற்றமடைவதில் அர்ப்பணிப்புள்ள ஊடகங்களுக்கும் முக்கிய இடமுள்ளதாகவும் தெரிவித்தார். கல்கிரியாகம உள்பத்தகமவிலுள்ள நாமல் உயன பூங்கா செயற்திட்ட அலுவலகத் தொகுதியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து அங்கு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை அரச நிர்வாகம் மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் சுற்றாடல் மற்றும் காலநிலை தொடர்பான பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கும் எமது வெளிநாட்டுக் கொள்கை பயன்படவேண்டும்.
நாடு என்ற வகையில் சுற்றாடல் மற்றும் நீரைப் பாதுகாப்பது எமது முக்கிய நோக்கமாகவேண்டும். நாட்டில் உள்ள நீர் நிலைகள் மற்றும் கடல் நீரையும் நாம் பாதுகாப்பது அவசியம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பொலித்தீன் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் 10 வருடங்களில் இது தொடர்பில் நாம் முக்கிய கவனம் செலுத்தாவிட்டால் இலங்கை மோசமான நிலையை எதிர்கொள்ள நேரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.