‘‘நான் அதிபராவதற்கு முன்பு இருந்ததை விட, உலக மக்கள் தற்போது மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்’’ என சிங்கப்பூர் பேச்சுவார்த்தை வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:நமது உலகம் பல முரண்பாடுகளை பார்த்துள்ளது. அமைதி ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்தால், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முடிவு கட்ட வாய்ப்பு ஏற்பட்டால், அதற்காக எவ்வளவு செலவானலும் அதை நிறைவேற்றிவிட வேண்டும். அமைதியான, பாதுகாப்பான எதிர்காலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவை. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வடகொரியாவுடன் நேரடியாக பேசி, அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்த நடவடிக்கைகளை அமல்படுத்துவார். அதுவரை தடைகள் அமலில் இருக்கும்.
அணு ஆயுத ஒழிப்புக்கு இன்னும் பல பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அமைதிக்காக இந்த முயற்சியை நாங்கள் கஷ்டப்பட்டு மேற்கொண்டு வருகிறோம். அதற்காகத்தான் சிங்கப்பூர் சென்றேன். அந்த சந்திப்பில் ஒவ்வொரு வினாடியும் பயனுள்ளதாக இருந்தது. அது வியக்கத்தக்க நிகழ்ச்சி. ஆசிய மக்கள் தற்போது பாதுகாப்பாக உணர்கின்றனர். உலக மக்கள், நான் அதிபராவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிக பாதுகாப்புடன் உணர்கின்றனர். இந்த சந்திப்பு அமெரிக்க-வடகொரியா உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா, தென்கொரியாவின் சிறந்த எதிர்காலத்துக்கான பாதையையும் இந்த சந்திப்பு திறந்துள்ளது. அமெரிக்காவின் பழைய நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையிலிருந்து இந்த சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், நேரடியாகவும், நேர்மையாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது. வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்புக்கு இது தொடக்கம்.
எங்கள் பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, பிரமாண்டமான செழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தினேன். அணு ஆயுதத்தை ஒழிக்கும்போது வடகொரியாவுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வடகொரிய மக்களுக்கு வியக்கத்தக்க எதிர்காலத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு கிம்முக்கு உள்ளது என சிங்கப்பூர் சந்திப்பில் தெரிவித்தேன். யார் வேண்டுமானாலும் போரை ஏற்படுத்த முடியும். ஆனால், மிகவும் தைரியமானவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா, சீனா பதிலடி
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் ₹3.42 லட்சம் கோடி கூடுதல் வரி விதித்தார். இது, அடுத்த மாதம் 6ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு இந்தியாவும் சீனாவும் நேற்று பதிலடி கொடுத்தன. கனடா, மெக்சிகோ தவிர மற்ற அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது. இந்த வரி விதிப்பு வரும் 21ம் தேதி அமலாகிறது. இதன் மூலம், அமெரிக்காவுக்கு அதிகப்படியான இரும்பு, அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா ₹1,200 கோடி வரை வரி செலுத்த வேண்டியுள்ளது. அதிபர் டிரம்பின் இந்த உத்தரவுக்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 30 பொருட்களின் வரியை அதே ரூ.1,200 கோடி அளவுக்கு மத்திய அரசு அதிகரித்துள்ளது. 800 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவீதம், ஆப்பிளுக்கு 25 சதவீதம், பாதாம் பருப்பு, வால்நட்டிற்கு 20 சதவீதம் என வரி விதிப்பை மாற்றியமைத்து உலக வர்த்தக அமைப்பிடம் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
₹3.42 லட்சம் கோடி கூடுதல் வரி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 659 வகையான பொருட்களுக்கு டிரம்ப் விதித்த அதே ₹3.42 லட்சம் கோடிக்கு சீனாவும் கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது. இதுவும் அடுத்த மாதம் 6ம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீன அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, 545 பொருட்கள் மீதான இறக்குமதி வரி அமலுக்கு வருகிறது. மீதமுள்ள பொருட்களுக்கான வரி விதிப்பை அமல்படுத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதற்கு சமமாக இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமாகி இருக்கிறது.