நானுஓயா டெஸ்போட் பகுதியில் உள்ள வீடுடன் கூடிய சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இத்தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
நானுஓயா பொலிஸார், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடையில் சமையல் எரிவாயு (காஸ் சிலிண்டர்) இருந்ததனால் இத்தீ பரவலாக பரவியதோடு, தீ விபத்தினால் அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.
தீ அனர்த்தம் ஏற்பட்டமைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய குறித்த கடையில் எரிந்த மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

