சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை நாளைமறுதின பாராளுமன்ற அமர்வின் போது , சபையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, குறித்த இணக்கப்பாட்டிற்கமைய வரவு – செலவு திட்டத்தில் வரவு மற்றும் செலவிற்கிடையிலான இடைவெளியை 2.3 என்றவாறு நேர்மறைப் பெறுமானத்தில் அதிகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள ஊழியர் மட்ட இணக்கப்பாட்டில் வரவு – செலவு திட்டத்தில் வரவு மற்றும் செலவிற்கிடையிலான இடைவெளியை 2.3 என்றவாறு நேர்மறைப் பெறுமானத்தில் அதிகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த இலங்கை அடைவது மிகக் கடினமாகும். எனினும் இதனை எவ்வாறு நடைமுறையில் சாத்தியமாக்குவர் என்பது தெரியாது.
இவ்வாரத்தில் மேலும் பல வரி திருத்தங்கள் , புதிய சட்டங்கள் உள்ளிட்டவை வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாம் வழங்கிய ஆலோசனை கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இன்று இந்தளவு பிரச்சினைகள் தீவிரமடைந்திருக்காது.
அத்தோடு ஊழியர் மட்ட இணக்கப்பாட்டில் மிக முக்கிய நிபந்தனை கடன் மறுசீரமைப்பாகும். இந்தியாவிடமிருந்து மிகச் சிறிதளவு கடன் பெறப்பட்டுள்ளதால் அதில் பாரிய சிக்கல்கள் ஏற்படாது.
எனினும் ஜப்பான் மற்றும் சீனா என்பவற்றிடமிருந்தே அதிக கடன் பெறப்பட்டுள்ளது. இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.
ஆனால் சீனா இது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. சீனா ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு வந்தால் , நேர்மறையான பிரதிபலன்களை எதிர்பார்க்கலாம்.
அன்றேல் மாற்று வழி குறித்து சிந்திப்பது கடினமாகும். இவ்வனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வு காண்பது மாத்திரமின்றி , நாட்டில் ஊழல் மோசடி முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் ஒருபோதும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது என்றார்.