நாட்டை வங்குராேத்து அடையச்செய்தது நிதி சார்ந்த குற்றமாகும். அந்த குற்றத்தைச் செய்த ராஜபக்ஷ்வினரையும் அதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிலாபத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றத்தில் இருக்கும் 134 பேர் இணைந்து ராஜபக்ஷ்வினரின் குடும்பத்தை பாதுகாக்க மைப்பாதுகாவலர் ஒருவரை தெரிவு செய்துகொண்டனர்.
இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கிறங்கி போராடியது ராஜபக்ஷ்வினரை பாதுக்கக்கூடிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகவா என கேட்கின்றேன்.
நாட்டு மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை மீறுவதும்,நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்தாக்கி அந்த அழிவை மூடி மறைப்பதும், வங்குரோத்தாக்கியவர்களைப் பாதுகாக்க தனக்கு நெருக்கமான ஒருவரை ஜனாதிபதியாக நியமித்ததும் ஓர் நிதி சார்ந்த குற்றமாகும்
தற்போதைய ராஜபக்ஷ் ஆதரவு அரசாங்கம் அந்த நிதிக் குற்றத்துக்கு காரணமானவர்களைத் தண்டிக்காவிட்டாலும், அந்த நிதிக் குற்றங்களைச் செய்தவர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அத்துடன் திருடப்பட்ட பணம் அனைத்தும் நாட்டுக்கு கொண்டு வர தேவையான சட்டங்களை இயற்றுவோம்.
மேலும் கோடிக்கணக்கான தேவையற்ற செலவுகளைச் செய்து சுதந்திர தினம் கொண்டாடி இருக்க வேண்டிய தேவையில்லை செலவு செய்யப்பட வேண்டிய பல அத்தியாவசிய தேவைப்பாடுகள் உள்ளன.
சுதந்திர தினத்தன்று நடமாடும் கழிவறைக்கு 142 இலட்சம் ஒதுக்குவதற்குப் பதிலாக அந்த பணத்தை ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்க,மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் மற்றும் உர மானியம் வழங்குவதற்கு ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஏன் நினைக்கவில்லை? மக்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கும் போது,தங்கள் இயலாமையை மறைத்து,வெற்று சுதந்திரத்தை கொண்டாடி பாரியளவில் பணத்தை வீணடித்துள்ளனர்.
மேலும் ராஜபக்ஷ்வுக்கு ஆதரவான அரசாங்கத்தை உருவாக்க மக்கள் வீதியில் இறங்கவில்லை. நாட்டை அழித்து வங்குரோத்தாக்கியது ராஜபக்ஷர்களே. அதனால் இந்த நிதிசார்ந்த குற்றத்துக்கு ராஜபக்ஷ் குடும்பத்தினர் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.