Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம் | ஜனாதிபதி

October 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியுள்ளது | ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நல்ல பொருளாதாரக் கொள்கையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, “தேசிய சபையை” ஒரு தளமாகக் கொண்டு தேசிய கொள்கைக் கட்டமைப்புக் குறித்து கலந்துரையாட ஒன்றாக இணைவோம் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கிருமித் தொற்று நீக்கிய, திரவ மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று (10) கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

போட்டி மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரமொன்றை உருவாக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

முதலில் இந்த நிறுவனத்தின் தலைவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எதிர்காலத்தை உன்னிப்பாகக் கவனித்தவர். எங்களுக்கு உள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அவருக்கு நல்ல புரிதல் இருந்தது. எனவே இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவதோடு மட்டுமன்றி சர்வதேச ரீதியில் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து எமது ஏற்றுமதித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு இளைஞனாக ஆரம்பித்த இந்த வேலைத்திட்டத்தை அவர் வெற்றிகரமாக தொடர்ந்தும் முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். இந்த இடத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் கடினமான காலப்பகுதியில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. நமது வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம். நமக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி நமது தேவைக்கே போதுமானதாக இல்லை.

அதனால் ஒவ்வொரு வருடமும் கடன் வாங்க வேண்டியுள்ளது. இப்போது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். நமது பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். நமக்குத் தேவையான அன்னியச் செலாவணியை நாம் ஈட்ட வேண்டும். அந்நிய செலாவணி பற்றாக்குறையுடனோ வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையுடனோ இருக்க முடியாது. வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை வைத்திருப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறாயின் நமது வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

அதற்கு நாம் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் பொருட்கள், பயிரிடும் பயிர், வழங்கும் சேவைகளை அதிகரிக்க வேண்டும். மிகவும் போட்டித் தன்மை கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் ஒன்றே நமக்குத் தேவை.

இன்று மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். தொழில்களை இழந்துள்ளனர். சிலர் ஒரு வேளை உணவின்றி பசியால் வாடுகிறார்கள். இதற்கு நாம் நீண்டகால தீர்வு காண வேண்டும். அந்த நிலைக்குத் திரும்பிச் சென்று தீர்வுகளைத் தேட முடியாது. அதனால்தான் இன்று மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதற்காகத் தான் கொள்கைகள் உருவாக்க வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் நான் பிரதமராகவும் இருந்த போதே இந்த நிறுவனத்திற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்ன இருந்தார். நாங்கள் அனைவரும் இதை முன்னெடுத்துச் சென்றோம். இது நல்லாட்சியின் ஒரு பலனாகும். நாங்கள் அமைதியாக வேலை செய்தோம். பின்னர் அரசாங்கம் மாறியது. புதிய அரசாங்கம் வந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்படவில்லை. பொதுவாக, ஒரு அரசாங்கம் மாறினால், ஏற்கனவே இருந்த அரசாங்கம் செய்த பணிகள் நிறுத்தப்படும். ஆனால் இது நிறுத்தப்படவில்லை. அதன் பின்னர் நான் ஜனாதிபதியாகி இன்று இதனைத் திறந்து வைக்கின்றேன்.

நாம் அனைவரும் ஒரே தேசியக் கொள்கையில் இருந்து செயற்பட வேண்டும். ஆனால் நாம் ஒரு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். அந்த தேசிய கொள்கையில் நாம் முன்னோக்கிச் சென்றால், நாம் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம். நாம் அரசாங்கத்துக்கு அரசாங்கம் கொள்கைகளை மாற்றினோம். அமைச்சர்கள் மாறும் போதும் கொள்கைகள் மாற்றப்பட்டன. இவ்வாறு செயற்பட்டு நாம் எவ்வாறு முன்னேற முடியும்?

எமக்கு ஒரு நல்ல பொருளாதார கட்டமைப்பு இருக்க வேண்டும். ஒரு நல்ல சமூகக் கட்டமைப்பும் அரசியல் கட்டமைப்பும் இருக்க வேண்டும். நமது பொருளாதாரக் கட்டமைப்பானது, அரசியல் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்தே அமைகின்றது. நிலையான அரசியல் முறைமையொன்றை ஏற்படுத்த முடியாவிட்டால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் இன்று இங்கு இருக்கின்றன. எனவே, நாங்கள் ஒரு தேசிய கட்டமைப்பின்படி செயல்படுவோம் என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன். அப்போது அரசாங்கம் மாறினாலும் மாறாவிட்டாலும் பிரச்சினை இல்லை. அதனால்தான் அனைவரும் பங்கேற்கும் வகையில் பாராளுமன்றத்தில் பல குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். எதிர்காலத்தில் நமது தேசியக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் இதை ஒரு தளமாகப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றேன்.

இத்திட்டத்தின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான புதிய வழி கிடைத்துள்ளது. 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது போன்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான கொள்கை தொடர்பில் உடன்பாட்டுக்கு வர முடியும் என்று நான் நம்புகிறேன். அதை நாம் நிறைவேற்றுவோம்.

சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல

மருந்துப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே சேனக பிபிலேயின் கொள்கையாக இருந்தது. அதைத்தான் இன்று ‘யாடென்’ நிறுவனம் செய்து வருகிறது. கடந்த கோவிட் காலத்தில், மருந்துப் பொருட்களின் தேவை வலுவாக உணரப்பட்டது. இன்று யாடென் நிறுவனம், மருந்து ஏற்றுமதி நிறுவனமாக செயற்பட முன் வந்துள்ளது. அதற்கு நாம் பங்களிப்புச் செய்ய வேண்டும். யாடென் நிறுவனத்தை சர்வதேச அரங்கில் முன்னேற்ற எங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம். எமது நாடு எதிர்நோக்கும் டொலர் கொண்டுவரும் பிரச்சினைக்கும் இதன் ஊடாக தீர்வு கிடைக்கும். இத்தகைய திறன் கொண்ட இந்த இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நாம் கை கொடுக்க வேண்டும்.

யாடென் லெபோரடரீஸ் மருந்து உற்பத்தி நிறுவனத் தலைவர் சசிமால் திசானாயக்கவும் உரையாற்றினார். யாடென் நிறுவனத்தின் நினைவுப் புத்தகத்தில் ஜனாதிபதி, நினைவுக் குறிப்பையும் பதிவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பவித்ரா வன்னியாரச்சி, துமிந்த திசாநாயக்க, மயந்த திஸாநாயக்க, சுஜித் சஞ்சய, ஹர்ஷன ராஜகருணா, நிமல் லன்சா, ஜே.சி அலவத்துவல, எரான் விக்ரமரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, யாடென் லெபோரட்டீஸ் மருந்து உற்பத்தி நிறுவன தலைவர் சஷிமால் திசானாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Previous Post

முதல் பாடலை வெளியிடும் கார்த்தி படக்குழு

Next Post

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம் : எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை | சந்திரிகா

Next Post
இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம் : எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை | சந்திரிகா

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம் : எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை | சந்திரிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures