பல்லின மக்கள் வாழும் நாடுகளில் ஏற்படும் எல்லைப் போராட்டம், உள்நாட்டு யுத்தம், இனப்பிரச்சினை மற்றும் இனம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கமின்மை போன்றவற்றின் தீர்வுகளுக்கு மகாத்மா காந்தியின் முன்னுதாரணமான செயற்பாடுகள் சிறந்த வழிகாட்டலாக அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 150வது நினைவு தினத்தையொட்டிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஒழுக்கமும், வினைத்திறனுமுள்ள எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் மகாத்மாகாந்தியின் வாழ்க்கை செயற்பாடுகள் எமக்குமட்டுமன்றி எதிர்கால பரம்பரைக்கும் சிறந்த முன்னுதாரணமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி:
சிறந்த சாதனையாளர், சிரேஷ்ட வெற்றியாளர், அஹிம்சாவாதி என பல்வேறு பெருமைக்குரிய மகாத்மா காந்தி ஒரு நிரந்தரமான அரசியல்வாதியல்ல. அவர் ஒரு மனிதாபிமானி.
பிரிட்டிஷ் நிர்வாகத்திடமிருந்து இந்தியாவுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர் மேற்கொண்ட சுதந்திர போராட்டத்தில் சமகால தலைவர்களுக்கு அவர் வழங்கிய சிறந்த தலைமைத்துவம் சிறப்பானது.
அன்றுள்ள போராட்டங்களின் தன்மையானது இன்றுள்ள அரசியல்வாதிகள் உருவாக்கும் போராட்டங்களை விட வித்தியாசமானது. மகாத்மா காந்தி என்ற ஆளுமை இந்தியா மட்டுமன்றி முழு உலகினதும் கௌரவத்திற்குப் பாத்திரமானதாகும். இலங்கையில் கால் பதித்த தலைவர்களில் அவர் உண்மையான மனிதாபிமானி மற்றும் அஹிம்சாவாதியாவார்.
பிரிட்டிஷின் ஒடுக்கு முறைக்கு உள்ளான இந்திய மக்கள் மேற்கொண்ட சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய தலைவராவர். அவரது திறமை, கல்வி, ஒழுக்கம், வினைத்திறன், பொறுமை, எந்த வேளையிலும் மக்களை நேசிக்கும் தன்மை ஆகியன இன்று மட்டுமன்றி எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் சந்ததிக்கும் முன்னுதாரணமானவை. அவை கௌரவத்திற்குரியதாகும்.
மக்களை ஒன்றுதிரட்டி அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அவருக்கே உரித்தான விடயங்கள். அன்றைய யுகத்தின் தலைவர்களுடன் சமநிலைப்படுத்த முடியாதவர். இன்று நாம் அவரது வாழ்க்கைச் சரிதத்தை நினைவுகூருவது மட்டுமன்றி அவரது செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணமுமாகும்.
அவரது சுயசரிதை மற்றும் வரலாற்று நூல்களைப் பெருமளவில் நான் வாசித்துள்ளேன். எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கூட அவரது உருவப்படமொன்றை வைத்து கௌரவித்துள்ளேன். அவரது வரலாற்றை நாம் அனைவரும் கற்கவேண்டியது அவசியம்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்படவிருந்த போது மகாத்மா காந்தி அலி ஜின்னாவிடம் பாகிஸ்தானைப் பிரிக்க வேண்டாம். ஒற்றுமையாகச் செயற்படுவோம் என்றார். அதற்கு பதிலாக இந்திய நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்குமாறும் கேட்டுக்கொண்டார். எனினும் பல்வேறு விடயங்களை எடுத்துக்காட்டி பாகிஸ்தான் தனியாக பிரிய வேண்டியதன் அவசியத்தை ஜின்னா தெளிவுபடுத்தினார். இதனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்கவேண்டியதாயிற்று. சுமுகமானதொரு பேச்சுவார்த்தையாக அது இடம்பெற்றது.
கடந்த பல தசாப்தங்களாக இந்திய பாகிஸ்தான் எல்லைப் போராட்ட யுத்தத்தில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இன்றும் இருநாடுகளின் பாதுகாப்புக்காக பில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்தப் பிளவினால் இலட்சக்கணக்கான மக்கள் இருநாடுகளுக்குமிடையில் பிரிந்து மோசமான துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது.
அடிப்படைவாத இந்துத்துவவாதிகள் மகாத்மா காந்தியை சந்தேகித்தனர்.
தமது சொந்த விருப்பத்திற்கிணங்கவே அவர் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்தார் என குற்றஞ்சாட்டிய அவர்கள் அவரது படுகொலைக்கும் காரணமாயினர்.
இன்று முழு உலகினாலும் கௌரவத்திற்கும் போற்றுதலுக்கும் உரித்தான அந்த மாபெரும் தலைவர் மனிதரில் புனிதராக மதிக்கப்படுகிறார் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.