பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள மூவர் கையொப்பமிடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
சிறிபால கம்பலத், ரொஷான் ரணசிங்க ஆகியோரே இவ்வாறு கையொப்பமிடாதவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
இந்நாட்டின் பாராளுமன்ற வரலாற்றில் 47 ஆவது தடவையாக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையாக பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பதிவாகியுள்ளது.
நாட்டின் பிரதமர் ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 3 ஆவது நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவாகும். 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 ஆம் திகதி எஸ்.டபிள்யு. ஆர்.டீ. பண்டாரநாயக்கவுக்கு எதிராகவும், 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளே அவையாகும். மூன்றாவது பிரேரணையே நேற்று கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படுவதில்லை. இரகசிய வாக்கெடுப்பு அவசியம் எனின், அதுதொடர்பில் சபாநாயகருக்கு விசேட பிரேரணையொன்றின் மூலம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நிலையியல் கட்டளைச் சட்டத்துக்கு அமைய இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை சபாநாயகர் தெரிவுக்காக மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.