மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதிய (IMF) பிரதி நிதிகளுடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளனர்.
சூம் தொழில் நுட்பம் ஊடாக இந்த கலந்துரையாடல் நடந்துள்ளதுடன், இந்த கலந்துரையாடலானது சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்திருந்ததாக அறிய முடிகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிப் பனிப்பாளர் ஏன் மேரி குல்டே உள்ளிட்ட குழுவினர் இந்த சூம் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்ததாக அறிய முடிகிறது.
கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை தூதுக் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி அமரிக்கா நோக்கி பயணிக்கவுள்ள நிலையில் இப்பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளமை முக்கியமானதாகும்.
நிதி அமைச்சர் அலி சப்றி தலைமையிலான தூதுக் குழுவே இவ்வாறு 18 ஆம் திகதி அமரிக்காவின் வொசிங்டன் நகரை நோக்கி பயணிக்கவுள்ள நிலையில், அந்த தூதுக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
குறித்த தூதுக் குழு, வொசிங்டன் நகரில் 5 நாட்கள் தங்கியிருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.