புதுமுக நடிகர் தினேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘யாதும் அறியான்’ திரைப்படம் திரில்லராக இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற சுவராசியமான விடயங்களை பகிர்ந்து கொள்ளாமல், நடிகரும் , அரசியல்வாதியுமான விஜய் தொடர்பான விடயங்களை படக்குழுவினர் முன்னிறுத்தி இருக்கிறார்கள். இது ரசிகர்களையும், திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இயக்குநர் எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ், பிரானா, KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல் டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, கனல் கண்ணன், நடிகர்கள் செளந்தரராஜன், இ.வி.கணேஷ் பாபு, சம்பத் ராம் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
நடிகர் தினேஷ் பேசுகையில், “இந்நிகழ்விற்கு இரத்த கறை படிந்த ஆடையுடன் தோன்றுவதற்கு இயக்குநர் தான் காரணம். இந்த கதையை இயக்குநர் எம்மிடம் ஃபீல் பண்ணி சொன்னார், அதனால் தான் நான் ஒப்புக்கொண்டேன். ஒரு நல்ல நடிகர் என்ற அடையாளத்தை பெற விரும்புகிறேன். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.