உணவியல் நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘காசினோ’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மார்க்ஸ் ஜோயல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘காசினோ’. இதில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட புகழ் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் நடிகை வாணி போஜன், ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், செல்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தினேஷ் நாகராஜன் மற்றும் ஸ்டான்லி சேவியர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த நகைச்சுவை திரைப்படத்திற்கு கூடுதல் திரைக்கதையும் வசனத்தையும் ‘சச்சின்’ பட புகழ் இயக்குநர் ஜான் மகேந்திரன் எழுதியிருக்கிறார்.
டார்க் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாதம்பட்டி சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எம்முடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறேன்.
வாழ்க்கை ஒரு சூதாட்டம் என்பதையும், அதனை சூழல்கள் எப்படி தீர்மானிக்கிறது என்பதையும் சுவைபட சொல்லி இருக்கிறோம். இந்த திரைப்படத்தில் நாயகன் – வில்லன் என்ற வழக்கமான பாணி கிடையாது.
நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் ரங்கராஜ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி கிடையாது. நடிகை வாணி போஜன் கதையின் திருப்பத்திற்கு உதவும் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கோயம்புத்தூர் மாநகரத்தை கதை களப் பின்னணியாக கொண்டு ‘காசினோ’ தயாராகி இருக்கிறது” என்றார்.