விஜய் ரிவி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடமும் , ‘அயோத்தி’, ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ ஆகிய படங்களின் மூலம் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமான நடிகர் புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அழகர் யானை’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘மரகதக் காடு’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘அழகர் யானை’ எனும் திரைப்படத்தில் புகழ், ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆரியன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா மற்றும் கோகுல் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களை தவிர்த்து எண்பது அடி உயரத்திலான யானை ஒன்றும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறது. சபா குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
குழந்தைகளை கவரும் வகையினதான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ்.வி. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவசங்கர் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இன்றைய சூழலில் அனைத்து வயதினருக்கும் ஆண் -பெண் என இரு பாலினருக்கும் வாழ்வின் மீதான நம்பிக்கை என்பது குறைந்து வருகிறது.
இவர்களுக்கு உளவியல் ரீதியிலான வலிமையை வழங்குவது நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை வழங்கும் படைப்பாக இந்த ‘அழகர் யானை’ உருவாகிறது ” என்றார்.