இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பகாசூரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘ருத்ர தாண்டவம்’, ‘திரௌபதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பகாசூரன்’. இதில் ‘சாணி காயிதம்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்த இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஃபாருக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். சமூக கருத்தை வலியுறுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் சார்பில் இயக்குநர் மோகன் ஜி தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகராக உயர்ந்திருக்கும் இயக்குநர் செல்வராகவனின் ஆன்மீக தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இந்த படத்தின் டீசர் ஓகஸ்ட் 28ஆம் திகதி காலையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. டீசரில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்று இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.