‘பாண்டியன் ஸ்டோர்’ எனும் சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் தயாரிப்பாளர் கணேஷ் படத்தின் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
நடிகரும் ,இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ எனும் திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி. எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த் , வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இது ஒரு போராளி பற்றிய கதை. ஆனால் அவனது போராட்டத்தை பற்றிய கதை அல்ல. இது ஒரு ஃபிலிம் மேக்கரின் கதை.
ஆனால் அவர் படம் எடுத்த கதை அல்ல. வேறு கோணத்தில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குடித்தனகாரருக்கும் , அந்த வீட்டின் உரிமையாளருக்கும் இடையேயான பிரச்சனை என்றும் சொல்லலாம். ஒரு தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான பந்தம் என்றும் சொல்லலாம்.
இந்த படத்தின் கதையை நான் லீனியர் பாணியில் சுவாரசியமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.