2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகர் என்ற தேசிய விருதினை ‘பார்க்கிங் ‘ படத்தில் நடித்ததன் மூலம் வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கரை கௌரவிக்கும் வகையில் அவர் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு ‘கிராண்ட் ஃபாதர் ‘ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகரான ஃப்ராங்க்ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’ எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர்- ஃப்ராங்க்ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ஸ்மீகா , அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். கொமடி வித் ஹாரர் ஃபேண்டஸி படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதிற்கு தெரிவு செய்யப்பட்டதை அறிந்தவுடன் எம். எஸ். பாஸ்கருக்கு படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ‘ கிராண்ட் ஃபாதர் ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் எம். எஸ். பாஸ்கரின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.