தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியா சாம்பல்தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “அரசியலுக்கும் மதத்திற்கும் சம்பந்தமுண்டு. ஏனெனில் இன்று வந்திருக்கின்ற ஜனாதிபதியும் கூட மதத்தை வைத்து அதுவும் பௌத்த மதத்தின் தலைவராகவே வரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பௌத்தர்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கி அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர். அவ்வாறெனில் மதம் இங்கு முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது.
அதேபோலவே இந்தியாவிலும் மோடி மதத்தின் சார்பில் பிரதமராக வந்துள்ளார். எனவே மதம் என்பது மிக முக்கியமாக செயற்படும் விடயமாக காணப்படுகின்றது. அடுத்ததாக இனம் முக்கியமாகின்றது. நாம் சிறுபான்மை இனமாக இந்த நாட்டிலே வாழ்கின்ற நலையில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஆகவே எங்களுக்குள் உள்ள பிரிவினைகளை அகற்ற வேண்டும்.
சிறுபான்மை இனத்தவரைப் பொறுத்தவரை நாங்கள் வடக்கைச் சார்ந்தவர்கள், கிழக்கை சார்ந்தவர்கள், மலையகத்தை சார்ந்தவர்கள் என்ற பேதத்தை மறந்து தமிழினம் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சிறுபான்மையாக இருக்கின்ற முஸ்லிம்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.
இப்பகுதியில் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் உள்ள பல பாகங்களில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகக் கூறுகின்றது. ஆகவே நாங்கள் ஓரே இனம் என்ற அடிப்படையிலே வடக்கு கிழக்குப் பகுதிகளில் நீங்கள் போட்டியிடுங்கள். ஏனைய பகுதிகளை எங்களுக்கு விட்டுக்கொடுங்கள்.
அதாவது அப்பகுதியில் இருக்கின்ற சமூகங்களுக்காக விட்டுக்கொடுத்து அதன் மூலமாக உங்களுடைய பெருந்தன்மையைக் காட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேபோல், நீங்களும் நாங்களும் ஒரே இடத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட்டால் நாம் இருவரும் தோற்றுப்போவோம். அப்போது மூன்றாவது மனிதர் அங்கு வந்துவிடுவார். இது நாங்கள் எங்களுடைய இனங்களுக்கு செய்கின்ற அழிவு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே நாங்கள் ஒன்றாக கலந்துபேசி எங்கே யார் போட்டிபோட வேண்டும்? யார் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு அதனை செயற்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

