நாவிதன்வெளி பிரதேசசபையில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் தமிழ்த்தேசியத்தின் இருப்பை நிலைநாட்டியிருக்கின்றார்கள் என முன்னால் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளரும், தற்போது த.தே.கூட்டமைப்பில் வெற்றியீட்டிய உறுப்பினருமான எஸ்.குணரெத்தினம் தெரிவித்தார்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாவிதள்வெளியில் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேசத்தினை பொறுத்தவரையில் த.தே.கூட்டமைப்பின் வெற்றிக்கு இங்குள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள், குறிப்பாக த.தேசிய இளைஞர்கள், முதியோர்கள், உட்பட பொதுமக்கள் அனைவரதும் அயராத உழைப்பின் பேரிலே த.தே.கூட்டமைப்பு இந்த பிரதேசசபையிலே வெற்றியீட்டி இருக்கின்றது.
இந்த வெற்றியானது த.தே.கூட்டமைப்பினரை விமர்சித்த பலருக்கு மக்கள் கொடுத்த மரண அடியாகும் இவ்வாறான த.தேசிய பற்று உறுதியுடைய கட்சியை உடைக்க வேண்டும் என்று இந்தப்பிரதேசத்திலே சில தீய சக்திகள் பல முனைப்புக்களை எடுத்திருந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை என்பது வெளிப்படை உண்மையே. குறிப்பாக மீன் சின்னத்தில் வாக்குக்கேட்டவர்கள் தான் தேர்தலில் குதித்த பிரதேசத்தில் வெற்றியடைய முடியாமல் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர் போனஸ் ஆசனத்தினை பெற்றுக்கொண்டு, ஏதோ தாங்கள் மக்கள் மத்தியில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் போன்று மார்பு தட்டுகின்றார்கள் இவர்கள் யார் என்பதனை மக்கள் நன்கறிந்திருக்கின்றார்கள்.
தமிழர்கள் அனைவரும் கசப்பான எண்ணங்களை மறந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் ஒரே பாதையில் பயணிக்கவேண்டிய தேவையுள்ளது. எமது கட்சிக்கு தந்தையாக இருந்த தந்தை செல்வா முதல், எமது தலைவர் சம்பந்தன் ஐயா வரையும் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் சிறந்ததாகவும், அனைத்து உரிமைகளுடனும் கூடிய தீர்வை பெறவேண்டும் என்பதில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக உழைத்து வருகின்றது.
அவ்வாரான கட்சியான தமிழ்தேசியக்கூட்டமைப்பை சிலர் சிதைக்கப்பார்க்கின்றார்கள் இது சிறுபிள்ளைத்தனத்திற்கு ஒப்பானதாகும் தமிழர்களின் பலமும், மூச்சும் தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் என்பதனை தமிழ் மக்கள் இந்தமுறையும் நிருபித்து காட்டியிருக்கின்றார்கள். இந்தமண்ணில் தமிழ்தேசியக்கூட்டமைப்பை தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென்று மாற்றுக்கட்சிகள் தமிழ் மக்களிடத்தே வாக்குக்கேட்டு சென்றிருந்தபோதும் அதற்கான சரியான பதிலை தமிழ் மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்
ஆகவே த.தேசியத்தின் இருப்பை காப்பாற்ற பல வழிகளிலும் உழைத்த எமது பிரதேசத்தினை சேர்ந்த கல்விமான்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் மேலும் குறிப்பிட்டார்.