தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான கல்முனை சம்பந்தமான பேச்சு வார்த்தையின் போது முஸ்லிம் மற்றும் தமிழ் தரப்புக்களால் பரஸ்பரம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றி இன்னமும் இரு தரப்பாலும் வெளியிடாமல் இருப்பது மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு முரணானதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
கல்முனையை நான்காக பிரிப்பதில் உள்ள எல்லைப்பிரச்சினை பற்றி முஸ்லிம் தரப்பும் தமிழ் கூடமைப்பும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைக்கமைய நேற்று திரு. சம்பந்தனின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தின.
இதன் போது தமிழ் கூட்டமைப்பின் சார்பில் அதன் அரசியல் வாதிகளும் முஸ்லிம்கள் தரப்பில் சில அரசியல்வாதிகளும் சில சிவில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரச்சினையில் பிரதேச அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்டு முடிவெடுக்குமாறே ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியிருந்தார். இதற்கு முரணாக முஸ்லிம் தரப்பில் பிரதேச அரசியல் கட்சிகள் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரசும், தேசிய காங்குரசுமே கலந்து கொண்டன.
இதன் போது முஸ்லிம் தரப்பில் தாம் எதிர் பார்ப்பது என்ன என்று தமிழ் தரப்பிடம் எழுத்து மூல கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தாம் எதிர் பார்ப்பது என்ன என தமிழ் தரப்பிலும் எழுத்து மூலம் முஸ்லிம் தரப்பிடம் ஒப்படைத்ததாகவும் கலந்து கொண்ட தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதி ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் அக்கோரிக்கைகள் என்ன என்பது பற்றி அவரோ முஸ்லிம் தரப்போ இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை.
ஆகவே இந்த இரு தரப்பின் கோரிக்கைகளையும் பகிரங்கமாக ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் முன் வைக்கும் படி உலமா கட்சி இரு தரப்பாரையும் கேட்டுக்கொள்கிறது.