ஓர் ஆண்டுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழு கோடியே எழுபத்தேழு இலட்சம் ரூபாயை தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது எனபது தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
மலையக தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக ‘மாற்றம்’ இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் விவரம், ஒரு அங்கத்தவரிடம் அறவிடும் மாதாந்த சந்தாப் பணம், ஒரு வருடம் பெற்றுக்கொண்ட சந்தாப் பணம் போன்ற தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி கிட்டத்தட்ட 4 இலட்சம் அங்கத்தவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டிருக்கிறது. இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் ஒன்றரை இலட்சம் அங்கத்தவர்களையும் தேசிய தொழிலாளர் சங்கம் 21,280 அங்கத்தவர்களையும் கொண்டிருக்கின்றன.
இப்போது பெருந்தோட்டத்தில் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்களே வேலை செய்துவருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் திணைக்களம் வசமிருக்கும் 3 தொழிற்சங்கங்களின் தொகை மட்டும் ஐந்தரை இலட்சத்தைத் தாண்டுகிறது.
அப்டேட் செய்யப்படாத அங்கத்தவர் விவரங்களை வருடா வருடம் தொழிற்சங்கங்கள் அனுப்ப அதனையே தொழில் திணைக்களமும் பராமரித்துவருவது இதன் மூலம் தெரிகிறது.
தேசிய தொழிலாளர் சங்கம் ஒரு தொழிலாளியிடமிருந்து 25 ரூபா பெறுவதாக தொழில் திணைக்களம் வழங்கிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக அதிகரிக்கப்படும் வரை குறித்த தொழிற்சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் தொழிலாளர்களிடம் மாதாந்தம் சந்தாப் பணமாக 150 ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டதை மாற்றம் உறுதிப்படுத்தியது.
பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு (01.04.2016 – 31.03.2017) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழு கோடியே எழுபத்தேழு இலட்சம் (77,751,933) ரூபாவை தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது.
அதேபோல, இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம் இரண்டு கோடியே இருபத்தி நான்கு இலட்சம் (22,437,558.53), தேசிய தொழிலாளர் சங்கம் மூன்று கோடியே 45 இலட்சம் (34,524,328.41) என தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது.
குறித்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாப் பணத்தில் மேற்கொள்ளும் செலவுகள் என்னவென்று முதல் விண்ணப்பத்தில் கோரியபோது பதில் வழங்கப்படாததால், மேன்முறையீட்டின்போது செலவுகளை உள்ளடக்கிய ஆண்டு கணக்கறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதற்கு தகவல்களுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1) f பிரிவின் படி தகவல் தரமுடியாது என்று தொழில் திணைக்களம் மறுத்துள்ளது. இதனை எதிர்த்து தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஊடகம் ஒன்று முறைப்பாடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.