தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு , அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அத்தியாவசிய துறைசார் தொழிற்சங்கங்களினால் புதன்கிழமை (15) முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக புகையிரத பயணிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு சென்ற நோயாளர்களுக்கு இவ்வேலை நிறுத்த போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்தோடு புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும் , வங்கி கடன் வட்டி வீதங்களைக் குறைக்குமாறு கோரியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒரு சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத போதிலும், பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன.
அரசாங்கத்திற்கு மீண்டும் ஒருவாரம் கால அவகாசம் வழங்குவதாகவும், ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மக்களையும் இணைத்துக் கொண்டு வீதிக்கிறங்கி பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
புகையிரத சேவை
புகையிரத பொறியியலாளர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக அலுவலக புகையிரதங்கள் நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக அன்றாட புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். அத்தோடு புகையிரதங்களில் இராணுவ பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து புகையிரத திணைக்களத்தினால் 20 விசேட புகையிரத சேவைகள் நேற்று ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
வைத்தியசாலைகள்
வைத்தியர்கள் , தாதியர் மற்றும் வைத்தியசாலை சிற்றூழியர்கள் உள்ளிட்ட சகல மருத்துவதுறைசார் தொழிற்சங்கங்களினதும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெரும்பாலான பிரதான வைத்தியாசலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளின் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. மாறாக அவசர சிகிச்சை பிரிவுகள் மாத்திரமே இயங்கின. இதன் காரணமாக மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கும், கிளினிக்குகளுக்கும் வருகை தந்த நோயாளர்களுக்கு எவ்வித சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியாது வீடு திரும்ப நேர்ந்தது.
கல்வி
அதிபர், ஆசிரியர், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர்களும் நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். இதன் காரணமாக பெரும்பாலான அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பதோடு, மாணவர்களின் வருகையும் மிகக் குறைவாகவே காணப்பட்டது.
துறைமுகம்
துறைமுக துறைசார் தொழிற்சங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமையின் காரணமாக கொள்கலன் தரையிறக்கல், ஏற்றுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஊழியர்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்குமிடையில் அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது. அதன் பின்னர் துறைமுக ஊழியர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். எனினும் கடற்படையினரால் இந்நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
வங்கி
இதேவேளை நேற்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தன. இவை தவிர ஏனைய சில தனியார் வங்கிகளும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.
தபால்
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதிலும் , தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபாலங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. இதனால் மத்திய தபால் பரிமாற்றல் சேவைகள் முடங்கிக் காணப்பட்டன.