இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று (12) வியாழக்கிழமை நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த வேண்டுமானல் இலங்கையின் பந்துவீச்சு துல்லியமாக அமைவது அவசியமாகும்.
குவாஹாட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்களை இந்தியாவின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் விளாசி அடித்ததால் அவ்வணி இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அப் போட்டியில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் இலங்கையை இந்தியா விஞ்சியிருந்தபோதிலும் பெத்தும் நிஸ்ஸன்க (72), தனஞ்சுய டி சில்வா (47), அணித் தலைவர் தசுன் ஷானக்க (108 ஆ.இ.) ஆகிய மூவரும் மெச்சத்தக்க வகையில் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
மேலும் இன்றைய போட்டியில் இலங்கையின் ஏனைய முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ். அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலன்க ஆகியோர் கணிசமான ஓட்டங்களைப் பெற்று அணியைப் பலப்படுத்தவேண்டும்.
எவ்வாறாயினும் இந்திய துடுப்பாட்ட வீரர்களை இலங்கை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த தவறினால் தொடரைப் பறிகொடுக்க வேண்டிவரும்.
அத்துடன் களத்தடுப்பிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயற்படவேண்டிவரும்.
முதலாவது போட்டியின்போது வேகப்பந்துவீச்சாளர்களான டில்ஷான் மதுஷன்கவும் சாமிக்க கருணாரட்னவும் உபாதைக்குள்ளானது இலங்கை அணிக்கு பெரும் தாக்கத்தைக் கொடுத்துள்ளது. டில்ஷான் மதுஷன்க இன்றைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், சிறு உபாதைக்குள்ளான சாமிக்க கருணாரட்ன விளையாடுவார் என அறிவிக்கப்படுகிறது.
மதுஷன்க விளையாடாவிட்டால் அவருக்குப் பதிலாக லஹிரு குமார அணியில் இணைக்கப்படுவார்.
இதேவேளை, இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற இந்தியா கடுமையாக முயற்சிக்கும். மேலும் முதலாவது போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய போட்டியிலும் இந்திய அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள் (பெரும்பாலும்)
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே அல்லது மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷன்க அல்லது லஹிரு குமார.
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், யுஸ்வேந்த்ர சஹால், மொஹமத் சிராஜ், மொஹமத் ஷமி, உம்ரன் மாலிக்.