தைரியம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு தமிழக நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ” தைரியம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும். கமலஹாசனுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது. கமல் கூறும் கருத்துக்களுக்கு அமைச்சர்கள் பதில் மட்டுமே கூறுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
அண்மையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த கமல்ஹாசன், “தமிழக அரசியலின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது” எனக் குற்றம் சாட்டியிருந்தார் இதற்கு ‘மக்கள் மனதில் உள்ளதையே நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்’ என எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு ஆளும் அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பேட்டியளித்து வருகிறார்கள். “தமிழக அரசு குறித்து ஆதாரம் இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் பேசி வருவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது; அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, தூத்துக்குடியில் தெரிவித்திருந்தார். அதிமுக அமைச்சர்கள் ஒருவர் மாறி ஒருவர் நடிகர் கமல்ஹாசன் மீது தாக்குதல் தொடுத்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.